பிரதமரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன்

சென்னை திரும்பியுள்ள விஜயகாந்த்

இரண்டு நாட்கள் காத்திருந்தும் இவருக்கு இந்த நிலை

டில்லியில் பிரதமர் மோடி, பாஜ தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்திக்க முடியாமல் அங்கிருந்து ஏமாற்றத்துடன் விஜயகாந்த் நேற்றிரவு சென்னை திரும்பியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய மக்களவை தேர்தலில், தமிழகத்தில் பாஜ கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, .ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில் தேமுதிக 14 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெற முடியவில்லை.
10 தொகுதிகளில் கட்டுப்பணத்தைக்கூட இழக்க நேரிட்டது. தமிழகத்தில் பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ஆகியோர் மட்டும் வெற்றி பெற்றனர். அதே சமயம், நாடு முழுவதும் நடந்த தேர்தலில் பாஜ மட்டுமே 282 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தது.எனினும், தேர்தல் வெற்றிக்கு பின்னர் டில்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது விஜயகாந்தை மோடி கட்டித் தழுவி வரவேற்றார். கடந்த 26ஆம் திகதி பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்கு தமிழக பாஜ கூட்டணியில் இடம் பெற்ற தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

விழாவில் பங்கேற்பதற்காக 26ஆம் திகதி காலையில், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் டில்லிக்கு சென்றனர். ஆனால், அன்று மாலை நடந்த பதவியேற்பு விழாவில் அவர்கள் கலந்து கொள்ளாமல், ஹொட்டலிலேயே தங்கினர். விஜயகாந்துக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவு காரணமாக அவர் விழாவில் பங்கேற்கவில்லை என்று முதலில் தகவல் வெளியானது. அதன்பின், சுதீஷுக்கு இணை அமைச்சர் பதவி தராததால் விழாவை புறக்கணித்ததாகவும், விழாவில் பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால் புறக்கணித்ததாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. விழாவில் பங்கேற்க விஜயகாந்துக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டதாகவும் காரணம் வேறு  கூறப்பட்டது.

இந்நிலையில், பதவியேற்பு விழா முடிந்ததும் பிரதமர் நரேந்திரமோடி, பாஜ தலைவரும், உள்துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து பேசவும் விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார். இதற்காக 2 நாட்கள் விஜயகாந்த் டில்லியிலேயே தங்கியிருந்தார். ஆனால், ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி ஆகியோரை விஜயகாந்தால் சந்திக்க முடியவில்லை என தெரிகிறது.பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றபின் தொடர்ந்து 2 நாட்களுமே தொடர்ச்சியாக அலுவல்கள் நிமிர்த்தம் இருந்ததால், விஜயகாந்துக்கு நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, விஜயகாந்த் ஏமாற்றத்துடன் நேற்று இரவு  9.50 மணியளவில் சென்னை திரும்பினார் என அச்செய்திகள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top