முஸ்லிம்களுக்கு
தலைமை கொடுக்க
புதிய முகங்கள் வேண்டும்!
-
சஹாப்தீன் -
இலங்கையின்
அரசியல் யாப்பை மாற்றியமைத்து மூவின மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதியதோர் அரசியல்
யாப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின்
இந்நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் பலவும் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின்
இந்நடவடிக்கைக்கு சில அரசியல் கட்சிகளும், பௌத்த அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துக்
கொண்டிருக்கின்றன. நாட்டை பிரிப்பதற்கு சர்வதேச நாடுகள் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதாகவும்,
இதற்கு அரசாங்கம் துணை போய்க் கொண்டிருப்பதாகவும் அவைகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
இதனிடையே புதிய அரசியல் யாப்பின் மூலம் முன் வைக்கப்படும்; இனப் பிரச்சினைக்கான அரசியல்
தீர்வில் தங்கள் சமூகத்தின் எதிர் பார்ப்புக்களைக் கொண்ட யோசனைகளை முன் வைப்பதற்கு
தமிழ், மலையகத் தமிழ் சமூகத்தினர் புத்திஜீவிகள், துறைசார்ந்த வல்லுனர்களுடன் கலந்துரையாடல்களை
மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், முஸ்லிம் சமூகத்தின் சார்பில் இத்தகைய கலந்துரையாடல்
நடைபெறாமலிருப்பது முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறித்து மக்களிடையே உள்ள நம்பிக்கையீனத்தை
அதிகரிக்கச் செய்வதாகவே இருக்கின்றது.
முஸ்லிம்
கட்சிகளும், பிரதிநிதிகளும்
***********************************************
முஸ்லிம்கள்
மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என அரசியல்
கட்சிகளும், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை, தேசிய சூறா சபை, முஸ்லிம் கவுன்ஸில்
என பல அமைப்புக்களும், புத்திஜீவிகளும் உள்ள போதிலும் புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களுக்கு
எத்தகைய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் தீர்வுத் திட்டமென்ன
என்று ஒரு ஆவண ரீதியான திட்டமொன்றினை சமர்ப்பிக்க முடியாதிருப்பது முஸ்லிம்களிடையே
சமூக ரீதியான சிந்தனையுடன் உயிரோட்டமுடன் செயற்படக் கூடிய அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும்
இல்லையென்று காட்டுவதாகவே இருக்கின்றன.
மிக
அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை தமிழர்களுக்கு எத்தகைய தீர்வு வேண்டுமென்று
ஒரு உத்தேச திட்டமொன்றினை வெளியிட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்கள் மத்தியில் சுமார்
30 வருடங்களாக அரசியல் செய்து கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதிலிருந்து
பிரிந்து தனித்தனியாக செயற்படுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ்
எனப் பல கட்சிகள் இருக்கின்ற நிலையில் இன்னமும் முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் தீர்வு
என்னவென்று ஒரு ஆவணத்தைத் தயாரிக்க முடியாதிருப்பது கேவலமாகும். அதற்கான தயார் நிலையில்
கூட இக்கட்சிகள் இல்லாதிருப்பது முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலைச் செய்யாது, பாராளுமன்றத்தில்
கதிரைகளைப் பிடிப்பதற்கானதொரு மாமூலான அரசியலையே செய்து வந்துள்ளன என்று தெளிவாகின்றன.
தேசிய
சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கொண்டாட்டத்தில் தமிழில் தேசிய கீதம் பாடுமளவிற்கு
நாட்டின் அரசியலிலும், ஆட்சியாளர்களிடமும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே, படைத்தரப்பின்
கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களின் காணிகளில் ஒரு பகுதி மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் சகல சமூகமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு புதிய அரசியல் யாப்பு முன்
வைக்கப்படும் என்ற நம்பிக்கையை சிறுபான்மையினரிடையேயும், சர்வதேசத்தின் மத்தியிலும்
ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களும், அரசியல் கட்சிகளும்,
அமைப்புக்களும், புத்திஜீவிகளும் அக்கரையில்லாது இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இந்த
நாட்டில் எந்தப் பிரச்சினைகளுமில்லை. அவர்கள் முழு சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும்
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களா என்று கேட்கின்றோம். ஒழுங்கமைக்கப்படாத தலைவர்கள் ஆயிரம்
பேர் இருந்தாலும், அவர்களினால் எந்தப் பயனையும் அடைந்து கொள்ள முடியாது. இதுதான் முஸ்லிம்
தலைமைகளினதும், அமைப்புக்களினதும் இன்றைய நிலையாகும்.
முஸ்லிம்
இளைஞர்கள்
******************************
முஸ்லிம்
அரசியல் தலைவர்கள் முதல் அனைத்துத் தலைவர்களையும் ஒழுங்கமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதனைச் செய்வதற்கு படித்த முஸ்லிம் இளைஞர்கள் முன் வருதல் வேண்டும். முஸ்லிம் சமூகத்தின்
இளைஞர்கள் தங்களை சமூகத்தின் காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன் வருவதில்லை.
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் பின்னால் அலைகின்றார்கள். தேர்தல் முடிந்ததும்
வேறு விடயங்களில் கவனம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், சமூகப் பார்வையில்
முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும், இளைஞர்களுக்குமிடையே வித்தியாசங்களை காண முடியாதுள்ளன.
ஒரு சமூகத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இளைஞர்களினால்தான் நல்ல
மாற்றங்களை உருவாக்க முடியும். மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை
வளர்த்து எடுப்பதற்கு பெரும் துணையாக இருந்தவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதலால்,
இளைஞர்கள்தான் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலப் பொறுப்புக்களை சுமக்க வேண்டியவர்கள்.
இத்தகைய பொறுப்பைக் கொண்டுள்ள இளைஞர்கள் நேர்மையுடன் சிந்திக்க வேண்டும். ஜனநாயக வழியில்
முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை
செய்ய வேண்டும். இளைஞர்கள் ஒரு சமூகத்தன் கண்கள் என்தனை மறந்து விடாதீர்கள். அரசியல்வாதிகளுக்கு
போஸ்டர்களை ஒட்டுவதற்கும், அவர்கள் வெற்றி பெற்றதன் பின்னர் தோள்களில் சுமந்து ஊர்வலம்
வருவதற்கும் இறைவன் படைக்கவில்லை.
முஸ்லிம்
அரசாங்க அதிபர்
**********************************
இலங்கையில்
25 நிருவாக மாவட்டங்கள் உள்ளன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு
மாவட்டங்களில் அரசாங்க அதிபர்களாக (மாவட்டச் செயலாளர்களாக) தமிழர்கள் உள்ளார்கள். ஏனைய
மாவட்டங்களில் சிங்களவர்கள் அரசாங்க அதிபர்களாக உள்ளார்கள். ஆனால், அம்பாரை மற்றும்
திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற போதிலும், முஸ்லிம்
அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்படவில்லை. இதனை யாரும் இனவாதமென்று கருதிவிட முடியாது.
ஒரு மாவட்டத்தில் எந்த சமூகம் பெரும்பான்மையாக உள்ளதோ அந்த சமூகத்தின் மொழி, கலாசாரங்களுடன்
தொடர்புடையவர்கள் அரசாங்க அதிபராக இருந்தால் மக்களுக்கு தங்களின் கருத்துக்களை நேரடியாக
தெரிவிக்க முடியும்.
அம்பாரை
மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள் என்பது மிகவும் தெளிவாக இருக்கின்ற
நிலையிலும் சிங்களவர்களே தொடர்ந்து அரசாங்க அதிபர்களாக இருக்கின்றார்கள். அம்பாரை மாவட்டத்தில்
முஸ்லிம்களை சமாளிப்பதற்காக மேலதிக அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு போதிய அதிகாரங்கங்கள் வழங்கப்படவில்லை. அவர் பேருக்கே உள்ளார். அரசாங்க அதிபராக
கடமையாற்றக் கூடிய தகுதியைக் கொண்ட முஸ்லிம்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள்; புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
முஸ்லிம்களிடத்தில் அமைச்சர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்களினால் இவற்றை அடைந்து
கொள்ள முடியாதிருக்கின்றன. அமைச்சர் பதவிகள் தனி நபர்களை அலங்கரிப்பதற்கல்ல. முஸ்லிம்
சமூகத்தின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கே அமைச்சர் பதவிகள் என்பதில் முஸ்லிம்கள்
தெளிவுடன் இருக்க வேண்டும்.
கரையோர
மாவட்டம்
**************************
அம்பாரை
மாவட்டத்திற்கு முஸ்லிம் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க முடியாமை. இம்மாவட்டத்தில்
உள்ள முஸ்லிம்களின் காணிகளை பாதுகாத்துக் கொள்ள முடியாமை போன்ற இயலாமைகளை மறைப்பதற்காகவே
கரையோர மாவட்டக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதனை அடைந்தே தீருவோம் என்று முஸ்லிம்
காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் பேசியது. ஆனால், கரையோர மாவட்டத்தின் அவசியம்
குறித்து பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றினைக் கூட முஸ்லிம் காங்கிரஸ் முன்
வைக்கவில்லை. கரையோர மாவட்டக் கேரிக்கைக்கு தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஆகிய கட்சிகளும் ஆதரவாகவே கருத்துக்களை முன் வைத்துள்ளன. இக்கட்சிகளும் பாராளுமன்றத்தில்
கரையோர மாவட்டக் கோரிக்கை பற்றி பேசவில்லை.
தற்போது
அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்
உள்ளார்கள். இவர்கள் தேர்தல் காலத்தில் கரையோர மாவட்டத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாக
இருந்தால் முஸ்லிம் காங்கிரஸின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டுமென்று வலியுறுத்தினார்கள்.
இவர்கள் பாராளுமன்றத்தில் கதிரைகளை பிடித்த போதிலும், இது வரைக்கும் கரையோர மாவட்டத்தைப்
பற்றி பேசவில்லை. தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் ஒரு கோரிக்கையாகவே
இதனை முஸ்லிம் காங்கிரஸ் கையாண்டு கொண்டிருக்கின்றது. விளையாட்டு மைதானங்களை பார்வையிடுவதனாலோ,
ஆஸ்பத்திரிகளுக்கு விஜயம் செய்வதனாலோ, தான் பாராளுமன்ற உறுப்பினர் என்று இறுமார்ப்பில்
இருப்பதனாலோ கரையோர மாவட்டம் கிடைக்காது. ஆதலால், கரையோர மாவட்ட கோரிக்கையை முன் வைத்து
வாக்குகளை வேட்டையாடிய அம்பாரை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இக்கோரிக்கையை
அடைந்து கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முஸ்லிம்கள்
நாட்டின் பல பாகங்களிலும் காணிப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிகளும் படைத் தரப்பின் கட்டுப்பாட்டில்
உள்ளன. இவற்றைப் பெற்றுக் கொடுப்பது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்.
ஆயினும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சிகளும் இது விடயத்தில் கவனம் செலுத்துவதாகத்
தெரியவில்லை. அரசாங்கத்தில் முஸ்லிம் கட்சிகள் பங்காளிகளாக இருப்பது சமூகத்தின் இழப்புக்களை
ஈடுசெய்வதற்காகும். ஆனால், எதிர்க்கட்சியில் உள்ள தமிழர் தரப்பு தமிழ் மக்களின் காணிகளை
மீட்பதில் அக்கரையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கையில், முஸ்லிம் தரப்புக்கள் வேறு காரியங்களில்
அக்கரை காட்டிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு
முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பல உள்ளன. இவற்றிக்கு தீர்வுகளை காண்பதற்குரிய
நடவடிக்கைகளை எடுக்காதுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும்,
அமைப்புக்களும் முஸ்லிம்களுக்கு அவசியமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. வீட்டில் பாவனைக்கு
உதவாத பொருட்களை வீசுவதனைப் போன்று இவர்களை வீச வேண்டியுள்ளது. இதற்காக முஸ்லிம்கள்
இன்னும் ஆகக் குறைந்தது நாலு வருடங்கள் காத்திருக்க வேண்டும். அது வரைக்கும் முஸ்லிம்
சமூகத்தின் நலன்களில் அக்கரை காட்டுவது யார்? முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு
தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது யார்? என்று கவலை கொள்ள வேண்டியுள்ளது.
மாகாண
சபை உறுப்பினர்கள்
************************************
மாகாண
சபை உறுப்பினர்களை எடுத்துகப் கொண்டால், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் போலவே
சமூகத்தின் விடயங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மாகாண சபைகளை எடுத்துக்
கொண்டால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகமாக உள்ளார்கள். முஸ்லிம்
முதலமைச்சர் ஒருவர் உள்ளார். சுகாதார அமைச்சராகவும் முஸ்லிம் ஒருவர் உள்ளார். இவர்கள்
முஸ்லிம் சமூகத்திற்கு எத்தகைய உரிமைகளை மாகாண சபை மூலமாக பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
ஹஜ்ஜுக் கடமைக்கு செல்லும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு லீவு எடுப்பதற்கு விசேட ஏற்பாடுகள்
முஸ்லிம்கள் பெரும்பான்மையில்லாத, முஸ்லிம் முதலமைச்சர் இல்லாத மாகாண சபைகளில் உள்ள
போதிலும், கிழக்கு மாகாணத்தில் அத்தகைய ஏற்பாடுகள் இல்லை. இது குறித்து கிழக்கு மாகாண
சபையின் உறுப்பினர்கள் கவனம் செலுத்துவதில்லை.
இன்னும்
ஒரு வருடத்தில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் இன்றைய
முஸ்லிம் உறுப்பினர்கள் களத்தில் குதிப்பார்கள். சமூகம் பற்றி பேசுவார்கள். சமூகத்திற்காக
பெரிதாக செய்து வைத்துள்ளதாகவும் பெருமை பாராட்டுவார்கள். இவர்களை மீண்டும் மாகாண சபைக்கு
அனுப்புவது கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இன்னும் உரிமைகளை அறிந்து கொள்ளவில்லை என்றாகிவிடும்.
சமூகத்தில் உள்ள தனிநபர்கள் விழித்துக் கொள்ளாத வரை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப்
பேசி ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட முடியாது.
புதிய
முகங்கள் வேண்டும்
*********************************
முஸ்லிம்
சமூகத்தின் எதிர் காலம் சிறப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களின் அரசியலிலும்,
அமைப்புக்களிலும் புதிய முகங்களுக்;கு முகவரிகளைக் கொடுக்க வேண்டும். புதிய தலைவர்களை
காண வேண்டும். மானத்தைப் பாதுகாத்துக் கொள்ளாத ஆடையை சித்தசுவாதீனம் உள்ள எந்த மனிதரும்
அணிந்து கொள்வதில்லை. அது போலவே முஸ்லிம்கள் தங்களின் மக்கள் பிரதிநிதிகளை தூக்கி வீச
வேண்டும். அரசியலில் முஸ்லிம்களின் மானம் இழந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற கசப்பான
உண்மையை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றி சுயமதிப்பீடு இல்லாத வரையில்
நம்மால் முன்னேற்றத்தைக் காண முடியாது.
Virakesari
07.02.2016

0 comments:
Post a Comment