சுஷ்மா சுவராஜ் – முஸ்லிம் காங்கிரஸ்

பிரதிநிகளுக்கிடையிலான சந்திப்பு

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும்  முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், பிரதி அமைச்சர் பைஸல் காசீம், கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில்  கலந்துரையாடப்பட்டதுடன் புதிய அரசியல் யாப்பு விடயத்தில் முஸ்லிம்களின்  வகிபாகம் மற்றும் அபிலாஷைகள் குறித்து இந்திய வெளி விவகார அமைச்சர் சுஸ்மா  சுவராஜுக்கு, முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளினால் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
அமையப்போகும் புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் உரிமைகள், நலன்கள்  உறுதிப்படுத்தப்படுவதுடன் அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களுக்கான தீர்வு  குறித்தும் சுஸ்மாவிடம் வலியுறுத்தப்பட்டதுடன் அதற்கு இந்தியா முழுமையான  ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக  சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும்  கல்முனை மாநகர முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர்  தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்  துருக்கிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதால் இச்சந்திப்பில் அவர் பங்கேற்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு முன்னதாக  இந்திய வெளி விவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், தமிழ் தேசியக் கூட்டமைப்புத்  தலைவர் இரா சம்மந்தன் மற்றும் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top