மானிப்பாயில் துப்பாக்கிச் சூடு
- வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் பலி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில், வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மானிப்பாய்- இணுவில் வீதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதிக் காவல் படையினர் ஈடுபட்டிருந்த பொலிஸார், மூன்று உந்துருளிகளில் வந்த ஆறு இளைஞர்களை மறித்து சோதனையிட முற்பட்ட போது, அவர்கள் பொலிஸார் மீது வாள்களால் தாக்க முற்பட்டதாகவும், அதையடுத்தே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் என்றும், மற்றொருவர் படுகாயம் அடைந்தார் எனவும், ஏனைய நால்வரும் தப்பியோடி விட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவரின் சடலம், உந்துருளி, வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டவர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இணுவில் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் அந்தப் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினரை தேடிச் சென்றதாகவும், பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 .




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top