எதிர்வரும் 27ஆம் திகதி நரேந்திர மோடி, நவாஸ் ஷெரிப் இடையே 

இருதரப்பு பேச்சுவார்த்தை

மோடி பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான பிரதமர் நவாஷ் ஷெரிப் பங்கேற்பது உறுதயாகி உள்ள நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி  நரேந்திர மோடி, நவாஸ் ஷெரிப் பங்கேற்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு பேச்சு வார்த்தைக்குப் பின் ஷெரிப் பாகிஸ்தான் புறப்பட்டுச் செல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி நாளை மறுநாள் பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அந்நாட்டு ராணுவத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி பங்கேற்கிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணி கட்சியான சிவசேனா போராட்டம் துவங்கியுள்ளது
ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் இரவு பகலாக நடந்து வருகிறது. 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளதால், மாளிகை வளாகத்தில் புல்வெளியில் விழா நடக்கவுள்ளது. யார், யார் எந்த இடத்தில் அமர வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்காக நாற்காலிகள் போடப்பட்டு வருகிறது. டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மோடி பதவி ஏற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா ஆகியோர் வருவதாக தெரிவித்துள்ளனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஜப்பானுக்கு செல்வதால் அந்நாட்டு சபாநாயகர் ஷர்மின் சவுத்ரி பங்கேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே போல், பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக பாகிஸ்தானின் ஆளும் பிஎம்எல்என் கட்சி செய்தி தொடர்பாளர் சித்திக் பரூக் தெரிவித்திருந்தார். ஆனால், நவாஸ்ஷெரீப் கலந்து கொள்வதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனால், அவர் டெல்லி வருவது சந்தேகம் என இன்று காலை செய்திகள் பரவின. நவாஸ் மகள் மர்யாம் நவாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவுடன் சுமுக உறவை வளர்ப்பது அவசியம், நவாஸ் பங்கேற்பது அதற்கு உதவும் என கூறியிருந்தார். இந்நிலையில், நவாஸ் ஷெரீப் நாளை காலை டெல்லி வருகிறார் என்றும் மோடி பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்கிறார் என்றும் இன்று காலை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது
இதற்கிடையே, இந்தியாவில் பாஜவின் முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனா, நவாஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் அத்துமீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஷெரீப்புக்கு அழைப்பு விட்டிருக்க கூடாது என கண்டித்து ஷெரீப் உருவ பொம்மையை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இதேவேளை, மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கைஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வருகை தருவதற்கு  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் மு.கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேசமயம், விழாவுக்கு வருவதில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆர்வமாக இருக்கிறார். அவர் தமிழகத்தில் உள்ள எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் அழைத்து வர திட்டமிட்டு, அவரை அழைத்தார். ஆனால், விக்னேஸ்வரன் அதை ஏற்கவில்லை. இதுகுறித்து விக்னேஸ்வரன் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில், ‘வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் ராணுவம் மக்களை பதற்றத்துடனே வாழச்செய்கிறது.வட மாகாண செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதே உண்மை. தங்கள் அழைப்பை ஏற்று நான் டெல்லி வந்தால் உண்மை நிலையை மறைத்து முகஸ்துதிக்காக வந்ததாக அமையும். எனினும் நரேந்திர மோடிக்கு எனது நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top