ஹமாஸ் போராளிகளிடம் பிடிபட்ட
இஸ்ரேல் இராணுவ  வீரர் மரணம்

போரில் இறந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

ஹமாஸ் போராளிகளிடம் சிக்கிய இராணுவ வீரர் போரில் இறந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது
பாலஸ்தீனத்தில் காஸா நகர் மீதான இஸ்ரேலின் இராணுவ தாக்குதலில் பலி எண்ணிக்கை 1766 தாண்டியுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் இராணுவம் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது.
வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் மூலமாக காஸா நகரமே சின்னாபின்னமாகியுள்ளது. மருத்துவமனை, பாடசாலை என்று தயவு தாட்சண்யம் இன்றி இஸ்ரேல், காஸா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. சர்வதேச நாடுகளின் கண்டிப்பையும் மீறி இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு இதுவரை 1766 பேர் பலியாகியுள்ளனர். 9320 பேர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 398 குழந்தைகள், 209 பெண்கள்,74 வயோதிபர்கள் என அப்பாவி பொதுமக்களாகவே உள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து ஐநா உள்ளிட்ட உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. கடந்த 30 ஆம் திகதி தாக்குதலுக்கு அஞ்சி பாடசாலை ஒன்றில் ஐநா அமைத்திருந்த முகாமில் சுமார் 3 ஆயிரம் பேர் தஞ்சமடைந்திருந்தனர். தற்போது அந்த பாடசாலை மீதும் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட பலர் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்தது. இருதரப்பினரும் போர்நிறுத்தத்திற்கு முன்வர வேண்டும் என்று பான் கீ மூன் கண்டித்தார். இதனையடுத்து நேற்று காலை 8 மணி முதல் அமைதி காக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் போர் நிறுத்த அறிவிப்பையும் மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 165 பேர் பலியாயினர் என அறிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஹமாஸ் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேல் இராணுவ வீரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஹாதர் கோல்டின் என்பவரை ஹமாஸ் போராளிகள் பிடித்து சென்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இஸ்ரேல் இதனை மறுத்துள்ளது. இரு தரப்புக்கும் ஏற்பட்ட பலத்த சண்டையில் 23 வயதான ஹாதர் கோல்டின் நேற்று முன் தினம் வீரச்சாவு அடைந்தார் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகள் கோல்டின் இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த  போரில் 67 பேர் உயிரிழந்திருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில்  64 பேர் இஸ்ரேல் இராணுவத்தினராகும்.  






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top