விபரீதம் நடந்த பின்தான் தீர்ப்பா?

                         
மருதூர் தேடல்




கிழக்கிலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் எழில் கொஞ்சும் கிராமங்களில் ஒன்றுதான் சாய்ந்தமருது. அது குறுகிய நிலப்பரப்பிற்குள்ளே நிறைந்த சனங்களைக் கொண்ட அடர்த்தியானதொரு கிராமமாகும்.
இந்தக் கிராமத்தை கிழக்கு மேற்காக ஊடறுத்துச் செல்கின்ற முக்கியமான வீதிகளில், அல்-ஹிலால் வடக்கு வீதி மிக முக்கியமானதாகும். சிறியவர்கள் முதற்கொண்டு முதியோர் வரை பாவிக்கின்ற இந்த வீதியால் பாரிய வாகனங்களும் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய முக்கியமான வீதியானது பிரதான வீதியைச் சந்திக்கின்ற அதாவது கமு/அல்ஹிலால் வித்தியாலயத்திற்கு அண்மையிலுள்ள சந்தியிலே விரைவிலே அனர்த்தமொன்று நிகழ்வதற்கான ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருப்பதை அவ்வீதியால் பயணிக்கின்ற சகலரும் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.
டெலிகொம் நிறுவனத்துக்குச் சொந்தமான குழியொன்றுக்குப் போடப்பட்டுள்ள இரும்பினாலான மூடியானது இன்றைக்கோ நாளைக்கோ குழிக்குள்ளேயே வீழ்ந்து விடுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. அவ்வாறு விழுந்து விடுகின்ற சந்தர்ப்பத்திலே, இதன் மேல் பயணிக்கின்ற பொது மக்கள் அல்லது வாகனங்களின் நிலையைப் பற்றி யோசிக்கவே பயங்கரமாக இருக்கின்றது.
இந்த வீதியால் பயணிக்கின்ற பொது மக்களாயினும் சரி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினராயினும் சரி, நடக்கவிருக்கின்ற விபரீதத்தைப் பற்றி அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. விபரீதம் நடக்கும் வரை காத்திருப்பது போலத் தான் தெரிகின்றது. வருமுன் காப்போம், கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் தான் என்பதை ஊர்ஜிதப்படுத்துவது போலவும் இருக்கிறது.
இதனை செப்பனிடுவதற்கு சில ஆயிரம் ரூபாக்கள் தான் செலவாகப் போகின்றது. ஆனால், இதனால் சிலவேளை உயிரிழப்பு ஏற்பட்டால், அதன் பெறுமதி எத்தனை கோடிகளுக்கும் ஈடாகாது என்பது உண்மையிலும் உண்மை. எனவே இத்தகைய வேண்டத்தகாத நிகழ்வுகள் இடம்பெறும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், விரைவாக செயலில் இறங்கி மேற்படி குழியின் மூடியை உரிய முறையில் செப்பனிட்டு நடக்கவிருக்கும் விபரீதத்தை தடுக்க வேண்டும். மாறாக, தப்பித்தவறி ஏதும் விபரீதம் நிகழுமிடத்து அதற்கான முழுப் பொறுப்பையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top