மோடி பதவியேற்பு விழாவுக்காக

வானிலும், மண்ணிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

மோடி பதவியேற்பு விழாவுக்காக வானிலும், மண்ணிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி நாளை மறுதினம், ஜனாதிபதி மாளிகையின் முன் பகுதியில் பதவியேற்கிறார். இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் உட்பட 3 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். மோடிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், இந்த பதவியேற்பு விழாவை தீவிரவாதிகள் சீர்குலைக்க முயற்சிக்க வாய்ப்புள்ளது. எனவே, குடியரசு தின விழா பேரணியின் போது அளிக்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக, இந்த பதவியேற்பு விழாவுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. விமானப்படையின் மூலம் வான்வெளி பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மேலும், விழா நடக்கும் இடத்தை சுற்றியுள்ள உயர்ந்த கட்டிடங்களின் மீது குறிபார்த்து சுடுவதில் வல்லவர்களாக விளங்கும் வீரர்களும் நிறுத்தப்பட உள்ளனர். விமான எதிர்ப்பு பீரங்கிகளும் ஆங்காங்கு நிறுத்தப்பட உள்ளன. இது தவிர, தேசிய கமாண்டோ படையின் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு பணியில் துணை ராணுவம், டெல்லி பொலிஸார் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஜனாதிபதி மாளிகையை சுற்றி ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. விழா நடப்பதற்கு 5 மணி நேரத்துக்கு முன்பாக, இந்த அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு, பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறது. மேலும், விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால், ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையின் முன் பகுதியில் இதற்கு முன்பு சந்திரசேகரும், வாஜ்பாயும் பிரதமர்களாக பதவியேற்று உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top