"இஸ்ரேல் ஒழிக', "அமெரிக்கா ஒழிக'
ஈரானில் 700 நகரங்களில் போராட்டம்

காஸாவில் தாக்குதல் தொடுத்து வரும் இஸ்ரேலைக் கண்டித்தும், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஈரானில் அந்நாட்டு மக்கள்  நேற்று வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர்.
தலைநகர் தெஹ்ரான் மற்றும் ஈரானின் 700 க்கும் மேற்பட்ட நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக அந்நாட்டுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
தெஹ்ரானில் "இஸ்ரேல் ஒழிக', "அமெரிக்கா ஒழிக' என்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தி, நகரின் ஏழு வெவ்வேறு பகுதிகளிலிருந்து பேரணியாக வந்த மக்கள் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடினர்.
முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்தின் கடைசி தினத்தை "ஜெருஸலம் தினமாக' கொண்டாடுவது ஈரானியர்களின் வழக்கம்.
இந்த ஆண்டு ஜெருஸலம் தினமான வெள்ளிக்கிழமை, காஸாவில் மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நிகழ்த்துவதற்கான தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் உருவாக்கத்தை அங்கீகரிக்காத நாடுகளில் ஈரானும் ஒன்று. பாலஸ்தீன போராட்ட இயக்கங்களுக்கு அந்நாடு ஆதரவு அளித்து வருகிறது.
ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் அலி லாரிஜானி வியாழக்கிழமை கூறுகையில், ""இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு ஹமாஸ் நாங்கள் அளித்த தொழில்நுட்பத்தைத்தான் பயன்படுத்துகிறது.

தற்போது காஸாவின் போர் வீரர்கள் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களைத் தயாரிப்பதில் தன்னிறைவு பெற்று விட்டனர்.
ஆனால், ஒரு காலத்தில் ஆயுதத் தயாரிப்பதற்காக நாங்கள் அவர்களுக்கு உதவினோம்'' என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
முன்னதாக, ஹமாஸ் போராளிகளுக்கு ஈரான் நாடு 75 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்ட "ஃபஜ்ர்-5' ரக ஏவுகணைகளை வழங்கி உதவுகிறது என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்தது.

அதற்குப் பதிலளித்த ஈரான்  இராணுவத்தின் புரட்சிப் படைப்பிரிவுத் தலைவர் முகம்மது அலி ஜாஃபரி, "எங்கள் ஏவுகணைகளை அல்ல, தொழில்நுட்பத்தைத்தான் ஹமாஸ் பயன்படுத்துகிறது' என்று கூறியிருந்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top