பிறைக்குழு முக்கிய உறுப்பினரும், வானியல் அறிஞருமான ஆகில் 

அஹமத் சரீபுத்தீனின் முரணான கருத்தால்

பிறை தொடர்பான குழப்பம்
தற்பொழுதே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

உலப்பனை ஷாமில்


( அஸ்ஸலாமு அலைக்கும், வானியல் அறிஞர் ஆகில் அஹமத் சரீபுத்தீன் அவர்கள் வெளியிட்ட பிறை தொடர்பான நிலைப்பாட்டின் ஸ்க்ரீன் ஷாட்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அகில இலங்கை ஜமியத்துல் உலமா எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலைபிறை பார்க்கும் படி உத்தியோக பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ள நிலையில், உலமா சபையின்பிறைக்குழு முக்கிய உறுப்பினரும், வானியல் அறிஞருமான ஹோமியோபதி வைத்தியர் ஜனாப் ஆகில் அஹமத் சரீபுத்தீன் அவர்கள் இதற்கு முரணான கருத்தை வெளியிட்டுள்ளமை, பிறை தொடர்பானகுழப்பத்தை தற்பொழுதே ஆரம்பித்து வைத்துள்ளது.
"தலைப்பிறையைக் வெற்றுக் கண்களால் கண்டு மாதத்தை ஆரம்பிக்கும் நடைமுறையின் படி திங்கட்கிழமை ஷவ்வால் முதல் நாளாக வரவேண்டுமானால் ஞாயிற்றுக் கிழமை வெற்றுக் கண்களுக்கு தலைப்பிறை தென்பட வேண்டும். ஆனால் வானியலின் எதிர்வு கூறலின் படி ஞாயிற்றுக் கிழமை உலகின் எந்தவொரு நிலத்திணிவுகளிலும் வெற்றுக் கண்களுக்குத் தலைப்பிறை தென்பட முடியாது." என்று ஆகில் அஹமத் சரீபுத்தீன் உறுதியாக தெரிவித்துள்ளார். (புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)
உலமா சபையின் பிறை தொடர்பான நிபந்தனைகளில் "குறித்த ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்களுக்கு புலப்படுவது சாத்தியமற்றது என்று நம்பகமான முஸ்லிம் வானிலை அறிஞர்கள் உறுதி செய்யுமிடத்து, வானிலை அவதானத்தின் அடிப்படையிலான அந்நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படுவதோடு, அவ்வடிப்படையில் அன்றைய தினம் பிறை காண முடியாத நாளாக கொள்ளப்படும்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது. (அவ்வாறான நாளில் ஒருவரோ, ஒரு குழுவோ பிறையை கண்டதாக கூறினாலும், அவர்கள் மற்றவர்களை தூண்டக் கூடாது என்பதாக அடுத்த நிபந்தனை தொடர்கின்றது.)
மேற்படி நிபந்தனையும், அறிஞர் ஆகில் அஹமத் சரீபுத்தீன் அவர்களின் கருத்தும், மேலும் பிறை தென்பட முடியாது என்று கூறப்பட்டுள்ள நாளில் பிறை பார்க்கும்படியான உலமா சபையின் வேண்டுகோளும் குழப்பங்களை மேலும் அதிகரித்து உள்ளன.
ஜனாப் ஆகில் அஹமத் சரீபுத்தீன் மட்டுமின்றி, பிரபல சர்வதேச முஸ்லிம் வானியல் அறிஞர்களான காலித் செளகத், ஷேய்க் முஸாபர் ஸுகூர், முஹம்மத் அவ்தா, அப்துல் அஹத் மஹுமந்த் ஆகியோரும் ஞாயிற்றுக்கிழமை மாலை தலைப்பிறை தென்படுவதற்கான வாய்ப்பு உலகின் எந்த நாட்டிலும் இல்லை என்றே தெரிவித்து உள்ளனர். இதற்கு மாற்றமான கருத்தை, அதாவது, தலைப்பிறை தென்படலாம் என்கின்ற ஒரு சாத்தியப்பாடுள்ள கருத்தை எந்த ஒரு வானியல் அறிஞரும் இதுவரை வெளியிட்டுள்ளதாக அறிய முடியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை மாலை தலைப்பிறை உலகில் தென்படாது என்று உறுதியாக முஸ்லிம் அறிஞர்கள் அறிவித்துள்ள நிலையில், உலமா சபை ஏன் பிறை பார்க்கும்படி மக்களை பணித்தது என்பது கேள்விக்குரிய ஒரு விடயமாகும்.


கடந்த வருடம், கிண்ணியாவில் பிறை காணப்பட்ட பின்னர், சுமார் 30 க்கும் அதிகமானவர்கள் கண்ணால் கண்டதாக சொல்லப்படும் பிறையை நிராகரிக்க, வானியல் அறிஞர்களின் கருத்தே முன்வைக்கப்பட்டது, அதனை ஆகில் அஹமத் சரீபுத்தீன் அவர்கள் ஊடகங்களில் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், வானியல் அறிஞர்களின் கருத்து ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், எதற்காக அதனை மீறி பிறை பார்க்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது? (இது உலமா சபையின் நிபந்தனையையும் மீறுகின்றது.)
கடந்த வருடம், புதன்கிழமை மாலை தலைப்பிறை கிண்ணியாவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பொழுது, வியாழக்கிழமை பெருநாளாக அறிவிக்கப்படமால், அது நிராகரிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பெருநாளாக அறிவிக்கப்பட்டதன் மூலம், கலண்டர் விடுமுறையை பின்பற்றி வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை வருவதற்கு உலமா சபை வழி ஏற்படுத்திக் கொடுத்தது.
இம்முறை கலண்டர் விடுமுறையாக செவ்வாய்க்கிழமை குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பிறை தென்படாது என்று வானியல் அறிஞர்களும் அறிவித்துள்ள நிலையில், பிறை பார்க்கும் படியான அறிவிப்பு வெளியிடப்பட்டதன் நோக்கம், சனி, ஞாயிறு, திங்கள் என்று தொடராக மூன்று நாட்கள் விடுமுறை வருவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்கா என்று எண்ணத் தோன்றுகின்றது.
இவ்வருடம் உலகம் முழுவதும் நோன்பு ஒரே நாளில் ஆரம்பிக்கப் பட்ட பொழுது இருந்த மகிழ்ச்சியும், அமைதியும், பெருநாள் விடயத்தில் இப்பொழுதே குலைக்கப்பட்டு, உலமா சபை தனக்குத் தானே முரண்பட்டு, தனது வானியல் அறிஞருடனும் முரண்பட்டு நிற்கின்றது என்பது கவலையளிப்பதுடன், விடை காணமுடியாத கேள்விகளையும் எழுப்பியுள்ளது.









0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top