கொழும்பில் ஆகஸ்ட் 18- 20 வரை இலங்கை இராணுவக் கருத்தரங்கம்

இந்திய இராணுவம், பாஜக பங்கேற்பு


கொழும்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை இலங்கை இராணுவம் நடத்தும் ஆண்டுக் கருத்தரங்கில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளும், பாஜக சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஒப்புகை கடிதம் இரு தரப்பில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 இலங்கையில் 2009இல் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு, 2011ஆம் ஆண்டு முதல் இராணுவக் கருத்தரங்கை அந்நாட்டு அரசு நடத்தி வருகிறது. இதில், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சர்வதேச நாடுகளின் இராணுவம், காவல்துறைகள் கையாளும் உத்திகள் உள்ளிட்டவை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
 அந்த வகையில், எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை 3 நாள்கள் நடைபெறும் கருத்தரங்கு கொழும்பில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் செய்துள்ளது.
இக்கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயரதிகாரிகள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 இந்தியாவில் இராணுவத் தலைமையகத்துக்கும், சில அரசியல் தலைவர்களுக்கும் இலங்கை இராணுவம் அழைப்பு அனுப்பியுள்ளது. இதையடுத்து, அக்கருத்தரங்கில் பங்கேற்க தமது அதிகாரிகளை இந்திய இராணுவம் அனுப்பி வைக்கும் என்றும், பாஜக சார்பில் அதன் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் ஒரு குழுவினர் கருத்தரங்கில் பங்கேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கம் குறித்து இலங்கை தூதரக வட்டாரங்களில் விசாரித்தபோது, "இலங்கை: வளரும் நாடு எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு நட்பு நாடுகளும், பிற உலக நாடுகளும் எத்தகைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கும் என்பதை முடிவு செய்ய இக்கருத்தரங்கம் உதவியாக இருக்கும்.

தேசிய வளர்ச்சி, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்டவைகள் தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியாவின் பங்களிப்பைத்தான் இலங்கை மிகவும் உயரியதாகக் கருதுகிறது' என்று தெரிவித்தன

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top