பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் இடம்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!
பெருநாள் தினம் மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் வெளிப்படுத்தும் ஒரு தினமாகும். அத்தினத்தில் சந்தோஷத்தை வெளிப்படுத்தி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமுகமாக அவனைப் புகழ்ந்து, தொழுவது நபி சல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும்.
பெருநாள் தொழுகை எந்த இடத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனும் விடயத்தில் அறிஞர்களிடத்தில் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. ஷாஃபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் தவிர்ந்த மற்றைய அறிஞர்கள் பெருநாள் தொழுகை மக்காவைத் தவிர உள்ள ஏனைய இடங்களில், முற்றவெளியில் நிறைவேற்றப்படுவது ஸுன்னத் எனவும், நிர்ப்பந்தமான சூழ்நிலைகள் தவிர்ந்த மற்றைய சந்தர்ப்பங்களில் மஸ்ஜிதில் தொழுவது மக்ரூஹ்எனவும் கூறுகின்றனர்.
ஷாஃபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களைப் பொறுத்தவரையில் ஓர் ஊரின் மஸ்ஜித்மக்களுக்குப் போதுமானதாக இருக்குமாயின் மற்றைய இடங்களில் தொழுவதைவிட மஸ்ஜிதில்தொழுவதே மிகச் சிறப்பானதாகும். ஏனெனில் நபி சல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் முற்றவெளியை நாடிச் சென்றது ஊர்மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று சேர வேண்டுமென்ற நோக்கத்தினாலாகும். அந்நோக்கம் மஸ்ஜிதில் கைகூடிவிட்டால் அங்கு தொழுவதே சாலச் சிறந்தது என குறிப்பிடுகின்றனர். மேலும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மஸ்ஜிதில்இடவசதி போதாமை காரணமாகவே முற்றவெளிக்குச் சென்றார்கள் என்று ஸுனன் அல்-பைஹகீஎனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களின் கூற்றை இக்கருத்துக்கு வலுவாக எடுத்துக் கொள்ளலாம்.
அதே நேரத்தில், ஓர் ஊரின் மஸ்ஜித்மக்களுக்குப் போதுமானதாக இல்லாவிடின் முற்றவெளியில் தொழுவது ஸுன்னத்மாத்திரமின்றி இந்நிலையில் மஸ்ஜிதில்தொழுவது (மக்ரூஹ்)பொறுத்தமற்றதாகும். எனினும், மஸ்ஜித்மக்களுக்குப்போதுமானதாக இருக்கும் நிலையில் முற்றவெளியில் தொழுவதிலும் எந்தப் பிரச்சினையும் கிடையாது. மேலும், பெருநாள் தொழுகைக்காக முற்றவெளிக்குச் செல்ல முடியாத நிலையிலுள்ள பலவீனமானவர்கள், நோயாளிகள் போன்றோர்கள் இருப்பின் அவர்களுக்காக மஸ்ஜிதில்தொழுகை நடாத்த ஒருவர் இமாமாக நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில், பலவீனமானவர்களுக்கு மஸ்ஜிதில்பெருநாள் தொழுகை நடாத்துவதற்கு அலி றழிலியல்லாஹுஅன்ஹுஅவர்கள் அபூ மஸ்ஊத் அல்-அன்ஸாரி ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களை நியமித்தார்கள் என்ற அலி ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் செயலை இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவித்துள்ளதாக இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ்அல்-மஜ்மூஃவின் பெருநாளுடைய பாடத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேற்கூறப்பட்ட நபி மொழிகள், அவற்றிற்கான மார்க்க அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது.
01. தமது ஊரில் உள்ள மஸ்ஜித் அவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்றாகத் தொழுமளவு போதிய இடவசதி கொண்டதாக இருக்குமாயின் அம்மஸ்ஜிதில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது பொருத்தமானது. அவ்வாறில்லாத பட்சத்தில் முற்றவெளியில் நிறைவேற்றுவதே மிகப்பொருத்தமான விடயமாகும்.

02. பெருநாள் தொழுகைக்காக மஸ்ஜிதிலோ அல்லது முற்றவெளியிலோ பெண்களும் சமுகமளிக்குமிடத்து பின்வரும்      ஒழுங்குமுறைகளைப் பேணிக்கொள்வது மிக மிக அவசியம்.
இஸ்லாமிய ஆடை ஒழுங்குகளுடன் சமுகமளித்தல்.
மணம் பூசுவதைத் தவிர்ந்து கொள்ளல்.
அலங்கார ஆடைகள், ஆபரணங்கள் போன்றவற்றை மற்றவர்களுக்குத்   தெரியும்படி அணியாதிருத்தல்.
ஆண், பெண் கலப்பதைத் தவிர்க்க மறைப்பை ஏற்படுத்தல்.
பெண்கள் தனியாக சமுகமளிக்காது, மஹ்ரமான ஆண்களுடன் அல்லது கூட்டாக பெண்களுடன் சமுகமளித்தல்.
வரிசைகளைச் சீர்செய்வதில் கவனம் செலுத்துதல்.
ஆண்கள், பெண்கள் பிரவேசிக்க வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்துதல்.
பெண்கள் தொழுகை முடிந்தவுடன் தாமதியாமல் அவசரமாகத் தத்தமது வீடுகளுக்குச் சென்றுவிடல்.
வாலிபப் பெண்கள் சமுகமளிப்பதனால் பித்னா ஏற்படும் எனப் பயந்தால் அவர்கள் வருவது மக்ரூஹ் ஆகும்.
03. இவ்விடயத்தில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டுமெனவும் இதுவே இப்பெருநாளின் கருப் பொருளாகும் எனவும் ஊர்மக்களுக்கிடையில் பிரிவோ பிரச்சினையோ ஏற்படாவண்ணம் பொறுப்புடையோர்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும்  . . . மக்களைக் கேட்டுக்கொள்கின்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top