ராக்கெட் வீச்சு அபாயம் எதிரொலி

இஸ்ரேலில் விமான சேவைகள் நிறுத்தம்

சர்வதேச நிறுவனங்கள் அதிரடி

ராக்கெட் வீச்சு அபாயத்தின் காரணமாக, இஸ்ரேலில் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்தி உள்ளன.
இஸ்ரேலுக்கும், காஸா முனையை ஆட்சி செய்துவரும் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடந்த 8 ஆம் திகதி  தொடங்கிய சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
16–வது நாளான நேற்றைய நிலவரப்படி, இந்த சண்டையில் இதுவரை 693 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.               1 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக .நா. பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இருதரப்பு சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா, எகிப்து நாடுகள் முன்னின்று முயற்சி செய்து வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தனது நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியை எகிப்திடமும், அரபு லீக்கிடமும் பேச வைத்தார்.
.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் எப்படியாவது சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தியாக வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாஹூவை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஹாசா முனையிலிருந்து தங்கள் நாட்டின் மீது வீசப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் பிரதமர் காட்டினார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த பான் கி மூன், தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இன்னொரு புறம், காஸாமுனை மீது இஸ்ரேல் வான்வழி, கடல்வழி, தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து ராக்கெட் வீச்சு நடத்தி வருகின்றனர்.
இந்த ராக்கெட் வீச்சுகள், சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது. விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடக்கூடாது என்ற முன்ஜாக்கிரதை உணர்வில் பல்வேறு விமான நிறுவனங்களும் இஸ்ரேலுக்கான தங்களது விமான சேவையை நிறுத்தி உள்ளன.
இஸ்ரேலில் தனது விமான சேவையை முதலில் அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தி உள்ளது.
காஸா முனையில் இருந்து ஹமாஸ் போராளிகள் வீசிய ராக்கெட், இஸ்ரேலின் மிகப்பெரிய விமான நிலையமான பென் குரியன் விமான நிலையத்தின் அருகில் விழுந்தது. இதையடுத்து அங்கு 273 பயணிகளுடன் தரையிறங்க வந்துகொண்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் பாரீஸிக்கு திருப்பி விடப்பட்டது.
இதேபோன்று அமெரிக்காவின் பெடரல் ஏவியேசன் அட்மினிஸ்டிரேசன் இஸ்ரேலுக்கு போக வேண்டிய, அங்கிருந்து வர வேண்டிய அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி உள்ளது., ஏர் பிரான்ஸ், டச்சு ஏர்லைன் நிறுவனம் கே.எல்.எம்., ஆகியவையும் இஸ்ரேலுக்கான தங்களது விமான சேவையை நிறுத்தி உள்ளன. இது இஸ்ரேலின் சுற்றுலாத்துறைக்கு பலத்த அடியாக அமையும் எனக் கூறப்படுகின்றது.
இதற்கிடையே சண்டை நிறுத்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிற அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, விமான சேவை நிறுத்தத்துக்கு இடையே நேற்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் போய்ச் சேர்ந்தார்.
அங்கிருந்து அவர் ஜெருசலேம் புறப்பட்டுச்சென்றார். அங்கு அவர் .நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை சந்தித்து பேசுகிறார். அதன்பின்னர் ரமல்லா சென்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸையும் சந்தித்து சண்டை நிறுத்தம் குறித்து பேசுகிறார்.
இந்த சூழலில், .நா. பாதுகாப்பு கவுன்சிலில், இருதரப்பு சண்டை நிறுத்தத்துக்கான வரைவுத் தீர்மானம் ஒன்றை ஜோர்டான் சுற்றுக்கு விட்டுள்ளது.
.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம்பிள்ளை, காஸாவில் வீடுகள் மீது குண்டு வீசி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்களை கொன்று இஸ்ரேல் போர்க்குற்றத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
இஸ்ரேல்ஹமாஸ் போராளிகள் இடையேயான சண்டை பற்றி ஜெனீவாவில் அவசரமாகக் கூட்டப்பட்ட .நா. மனித உரிமை கவுன்சிலில் நடந்த விவாதத்தை அவர் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர், இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு நடத்தும் ஹமாஸ் போராளிகளுக்கும் கண்டனம் தெரிவித்தார்.










0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top