ஜனாதிபதியின் மின்சார கதிரை வாக்குறுதி காற்றில் பறந்தது

ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை

இராணுவத்தை காட்டிக் கொடுப்பதற்கு பதிலாக மின்சாரக் கதிரையில் 

அமர்வேன் என்று பெருமையடித்துக் கொண்ட ஜனாதிபதி ஏன் இப்படி 

செய்தார்.

வெற்றிநாள் வைபவங்களில் தேச மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிகழ்த்திய உரைகளில் மீண்டும் மீண்டும் கூறிய விடயம் ஒன்று என்னவென்றால் எமது படையினர் ஒரு கையில் ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தையும் மறுகையில் துப்பாக்கியையும் ஏந்தி போராடினார்கள் என்பதாகும்.    கடந்த வருடம் தெற்கு மற்றும் மேல் மாகாண சபை தேர்தல்களின் போது பகிரங்க மேடைகளில் அவர் கூறியிருந்தார். மின்சாரக் கதிரையில் அமர நேர்ந்தாலும் கூட இலங்கை இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க மாட்டார் என்று.    இப்பொழுது இதற்கெல்லாம் முற்றிலும் மாறாக அவ்வாறான போர்க் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் பிரகடனம் ஒன்றை ஜனாதிபதி ராஜபக்ஸ விடுத்திருக்கிறார்.  
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி நேற்று விடுத்துள்ள அறிக்கையயான்றில் குற்றஞ் சாட்டியிருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுற்ற காலத்திலிருந்து ஐந்து வருட காலமாக எமது படையினர் போர்க்குற்றங்கள் எதனையும் புரியவில்லை.    அதனால் அவ்வாறான விசாரணை ஒன்று அவசியமில்லை என்ற நிலைப்பாட்டையே அரசு வலியுறுத்தி வந்துள்ளது. இந்தக் கருத்து ஜெனிவா மனித உரிமை சபையில் மட்டுமன்றி உள்ளூரிலும் பொது மேடைகளிலும் பறைசாற்றப்பட்டு வந்துள்ளது.   ஜனாதிபதியின் கருத்து அரசு சார்ந்த தலைவர்களாலும் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. அரசின் இப்போதைய நிலைப்பாடானது போர்க்குற்றங்கள்  விசாரிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச கருத்துக்களுக்கு ஒத்துப் போவதாக உள்ளது. ஐ.தே.கட்சி தெரிவித்து வந்துள்ள இந்தக் கருத்தினை சில வருடங்களுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டு செயற்பட்டிருந்தால் நாட்டுக்கு இழைக்கப்பட்டு விட்ட பாரிய சேதங்களைத் தடுத்திருக்க முடியும்.    அது மட்டுமின்றி இப்போது நடத்தப்படுகின்ற சர்வதேச விசாரணையையும் கூட கேள்விக்குரியதாக்கியிருக்க முடியும்.   மக்களுக்கு தெரிய வேண்டும் இவ்வாறான ஒரு பிரதான விடயம் தொடர்பான ஒரு முக்கிய கொள்கை மாற்றத்தை ஏன் இரகசியமாக செய்துள்ளார்கள் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசும் பொதுமக்களுக்கு வெளிப்படையாகச் சொல்லியாக வேண்டும். அந்தச் செயற்பாடு அமைச்சர்களுக்கு தெரியாமல் செய்யப்பட்டிருக்க முடியாது.    ஆனால் அது பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல இந்த அரசு இது குறித்து நாடாளுமன்றத்துக்கும் தெரியப்படுத்தவில்லை. மனித உரிமை ஆணையாளர் சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த பொழுது அதனை மறுதளிப்பதற்கான நாடாளுமன்ற தீர்மானம் ஒன்றை அரசு நிறைவேற்றியிருந்தது.    அந்தத் தீர்மானத்துக்கு எதிர்த் தரப்பினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இப்பொழுது உள்ளக விசாரணையயான்றை நடத்துவதற்கு இரகசிய முடிவொன்றை எடுத்துள்ளது. அதைச் செய்கையில் அமைச்சர்களை ஓரங்கட்டியிருப்பது ஒரு பக்கம் போக மக்களையும் நாடாளுமன்றத்தையும் கூட அலட்சியம் செய்துள்ளது.    பொதுமக்களிடமிருந்து ஏன் இதை மறைக்கிறார்கள்? அது மட்டுமல்ல நாடாளுமன்றத்தில் அரசை ஆதரித்து நின்ற உறுப்பினர்களும் இப்போது காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டார்கள்.   இராணுவத்தை காட்டிக் கொடுப்பதற்கு பதிலாக மின்சாரக் கதிரையில் அமர்வேன் என்று பெருமையடித்துக் கொண்ட ஜனாதிபதி ஏன் இப்படி செய்தார். அதுவும் இரகசியமானது என்பதை அவர்கள் கேட்க வேண்டும். உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top