கோழி இறைச்சியில்  'ஆன்டிபயாடிக் எச்சங்கள்

இதனைப் பலர் தவிர்ப்பதாகவும் எச்சரிக்கை உணர்வுடன் 
அணுகுவதாகவும் தெரியவந்துள்ளது.

கோழி இறைச்சியில் அதிக அளவில் ஆன்டி-பயாடிக் எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அதனைப் பலர் தவிர்ப்பதாகத் தெரியவந்துள்ளது. சிலர் எச்சரிக்கை உணர்வுடன் இதனை அணுகுவதாகவும் கூறியுள்ளனர்.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.) நடத்திய ஓர் ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
டில்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதியில் இருந்து 70 கறிக்கோழி மாதிரிகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 36 மாதிரிகள் டில்லியில் இருந்தும், 12 மாதிரிகள் நொய்டாவில் இருந்தும், 8 கர்காவ்னில் இருந்தும், 7 பரிதாபாத், காஸியாபாத் ஆகியவற்றில் இருந்தும் பெறப்பட்டன.
கோழிப் பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட இந்தக் கறிக் கோழிகளின் ஈரல், தசை, சிறுநீரகம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது. இதில்தான் ஆன்டி-பயாடிக் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
கோழிவளர்ப்பில் 6 வகையான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன:
ஆக்சி டெட்ராசைக்ளின், குளோரோ டெட்ராசைக்ளின், டாக்ஸி சைக்ளின் (டெட்ராசைக்ளின் வகை), என்ரோபிளாக்சாசின், சிப்ரோபிளாக்சாசின்(ஃப்ளூரோகுய்னாலோன்) நியோமைசின் (அமினோக்ளைகோஸைட்) ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆன்ட்டி பயாடிக் மருந்துகளில் 5 வகை மருந்துகளின் எச்சம் அனைத்து கறிக்கோழிகளிலும் இருந்துள்ளன. கிலோவுக்கு 3.37-131.75 கிராம்/கி.கி ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் எச்சங்கள் கோழிக்கறியில் இருப்பது தெரியவந்தது. 40 சத மாதிரிகளில் இந்த மருந்து எச்சங்கள் இருந்தன. இந்த ஐந்து மாதிரிகளில் 22.9 சத ஆன்டி பயாடிக் எச்சங்கள் இருந்தன என்றும், ஒரு மாதிரியில் மீதமுள்ள 17.1% ஆன்டிபயாடிக் எச்சங்கள் இருந்தன என்றும் தெரியவந்துள்ளது. குர்கவான் பகுதியிலிருந்து பெற்ற  கோழிக்கறி மாதிரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளின் எச்சங்கள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.
கோழிகளின் வாழ்நாளில் 35 முதல் 42 நாட்களுக்குள் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் எவ்விதக் காரணமும் இல்லாமல் அவற்றின் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை விரைவுபடுத்தவுமே கொடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவில், ஒரு சிறு அளவு மட்டுமே தெரியவந்துள்ளது, இன்னும் அதிகமான ஆன்டிபயாடிக் மருந்துகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்படும் பாதிப்பு என அவர்கள் குறிப்பிடுவது, கறிக்கோழிகளுக்கு அதிக அளவு ஆன்டி-பயாடிக் கொடுக்கப்படுவதால், கோழிகளுக்கு வரக்கூடிய நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்பதுதான்!
ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் உடலில் சேர்வது, இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும். நாம் சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்டிபயாடிக்குகளை உண்கிறோம். ஆனால், கறிக்கோழியில் அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் ஆன்டிபயாடிக்கினால் குணப்படுத்தமுடியக் கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அந்த மருந்துகள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகச் சேர்ந்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, வேலை செய்யாமல் போய் விடுவதுதான்  எனக் காரணம் கூறப்படுகின்றது.
இந்த சோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் இது குறித்துக் கூறும்போது, "ஆன்டிபயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர், கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை முறையற்ற வகையில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என எச்சரித்துள்ளார்.

இறைச்சி உற்பத்தித் துறையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாட்டைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தகுந்த சட்டங்களை மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top