கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்  சம்மாந்துறை

முஹம்மத் றணூஸ்

ஒரு காலத்தில் சம்மாந்துறை சிலரால் சாம்பலாக்கப்பட்டது.இன்று சம்மாந்துறை மக்களின் வாக்குகளை வரும் பொதுத் தேர்தலில் தேர்தலில் எப்படி சின்னா பின்னமாக்குவது என்று நமக்குள்ளே சிலர் தங்களது அறியாமையினால் அல்லது தெரிந்தும் பல்வேறு நோக்கங்களுக்காக இன்று பொதுத் தேர்தலைக் குறி வைத்து தங்களது நேரங்களை பெறுமதியாகக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.இதனை நான் இவர்கள் சம்மாந்துறையின் வாக்குகளையும் வாக்காளர்களையும் கபளீகரம் செய்யும் முயற்சியாகப் பார்க்கின்றேன்.
இவர்களுடைய நோக்கம் சம்மாந்துறைக்கு பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுமென்பதல்ல.அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வர வேண்டும் என்பதே.அவ்வாறு அவர்கள் நினைப்பதிலும் தவறேதும் இல்லை. ஆனால் இவர்கள் அனைவரும் தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக வர வேண்டும் என்பதில் அவர்களுக்கிருக்கின்ற விருப்பத்தை  அடைந்து கொள்ளக்கூடிய நுட்பம் அறியாதவர்களாக உள்ளனர் என்பது வேதனைக்குரியதாகின்றது.
ஆளுக்கொரு பக்கம் ஓடி தன்னை விளம்பரப் படுத்தும் முயற்சிகள் இப்தார்கள் என்றும் ,சாப்பாடுகள் என்றும்,சங்கங்கள் அமைப்புக்கள் சந்தித்தல் என்றும் மய்யித்து வீடுகளுக்கு பரிவாரங்களுடன் செல்லுதல் என்றும்,பள்ளிவாசல்கள் நிர்வாகிகளை சந்தித்தல் என்றும்.........இப்படி நீண்டு செல்கின்றது

இவைகளினூடாக மக்களை அரசியல் மையப் படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி பாராளுமன்றம் செல்லலாம் எனும் இவர்களின் சாணக்கிய வியூகத்தைப் பார்த்து நாம் அதிகம் கவலைப் பட வேண்டும்.இவர்கள் பேசுவது ஊருக்கு எம் பி வேண்டும் என்றுதான்.அதனை எப்படி எடுப்பது?அதற்கான வியூகங்கள் என்ன?அதனைப் பெறுவதில் உள்ள சவால்கள் என்ன என்பதைப் பற்றி வாயே திறப்பதில்லை.
உண்மையாக எமது ஊர் இழந்து நிற்கின்ற பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்கு என்ன காரணம் எனும் கேள்விக்கு விடை இன்றியே இவர்கள் மக்கள் மன்றத்துக்கு வருகின்றார்கள்.இவர்களுடைய தைரியத்தைப் பாராட்ட வேண்டும்.சம்மாந்துறை மக்கள் கல்லால் அடிக்க மாட்டார்கள் என்பதிலே இவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள்.இல்லாவிட்டால் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளைக் கூட்டிக் கொடுக்கும் அரசியல் தரகர்களுக்கு இம்மண் இடமளித்திருக்காது அல்லவா...?
இன்று சம்மாந்துறை எனும் குழம்பிய அல்லது குழப்பியடிக்கப் பட்ட இந்தப் பெரிய காட்டில் எம் பி வேட்டையாடப் புறப்பட்டிருக்கும் இந்த அரசியல் தரகர்களை நம்பி நாம் இன்னுமொரு முறை எமாறப்போகின்றோமா? எனும் அச்சம் இன்று தோன்றியுள்ளது.
போகிற போக்கில் நானறிந்தவரை 09 பேர் பாராளுமன்றத் தேர்தல் கேட்பதற்குத் தயாராகியுள்ளனர். நானே அடுத்த எம் பி என்றும் ஆனால் நான் என்ன கட்சியில் வருவேன் என எனக்கே தெரியாது என்றும் அதி மேதாவித்தனமாக கூறிக்கொள்பவர்களும் இதில் அடங்குகின்றனர்.
விகிதாசாரத் தேர்தல் முறையின் பின்னல்களில் சுத்த ஞான சூனியமாக இருந்து கொண்டு சம்மாந்துறை மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக வாக்களித்தால் 02 எம் பி க்களைக் கூட வெல்லலாம் என்றும் வாதிடுவோரும் இங்கு உள்ளனர்.

ஒரு சுயேட்சைக் குழு அல்லது புதிய அரசியட் கட்சி ஒன்றைத் தாபித்து அதன் மூலம் நமது ஊருக்கு எம் பி யைப் பெற்றுக்கொள்ளும் நபர்களும் இந்தப் பட்டியலில் அடங்குகின்றனர்.
ஆக இந்தக் கருத்துக்கள் எதனை காட்டுகின்றது என்றால் அரசியலைப் பற்றி ,அதன் இயல்புகளைப் பற்றி,மக்களின் மனோபாவங்களைப் பற்றி தேர்தல் மற்றும் அதன் முறைகள் பற்றி,விசேடமாக நமது ஊரைப் பற்றி அதன் சமகாலப் போக்குகளைப் பற்றி அறியாது இந்த மக்களின் வாழ்வியல் நில புலன்களைப் பற்றி அறிவில்லாது அவர்களுடைய தேவைப் பற்றிய அறிவில்லாது இவர்கள் ஊருக்கு எம் பி வேண்டும் என்கிற கோஷத்தைக் கையில் எடுத்திருக்கின்றார்கள்.
ஆனால் சம்மாந்துறைக்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய தைரியமான பொறி முறையை இவர்களால் முன் வைத்து மக்களின் ஆதரவினைப் பெற இவர்களால் முடியவில்லை.
இன்றைய இப்படியான நிலவரமுள்ள சம்மாந்துறையில் மக்களின் மனவுணர்வு இவர்கள் எல்லாரும் சேர்ந்து இந்த முறையும் எப் பி யைத் திண்டிடுவானுகள் என்றே அமைந்திருப்பதை இந்த எம் பி மாரே நீங்கள் அறிவீர்களா....?
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பது ஒரு நலன் பேணும் அரசில் முக்கியமான சேவை வழங்குனர் ஆகும்.சம்மாந்துறை போன்ற வறிய மக்கள் கணிசமாக வாழும் பாரிய இடப் பரப்பொன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கும் வெற்றிடத்தால் எட்படும் இன்னல்களை இந்த எம் பி ஆக சண்டை பிடிப்போர் அறிய மாட்டார்கள்.
மாடு அறுத்துச் சோறு போட்டு, கந்தூரி கொடுத்து,நோன்பு திறப்பித்து, மட்டையும் பந்தும் கொடுத்து,பணத்தின் பவிசினை வெளிப் படுத்தி அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அடைந்து கொள்ள நமது உஊர் விரும்புமாயின் அதன் பலன் பூச்சியம்தான்.

பாராளுமன்ற உறுப்பினர் என்பவன் மக்கள் பிரதி நிதி.மக்களின் பிரதி நிதியாக இருப்பவன் மக்களின் குரலாக இருக்க வேண்டும்,மக்களின் குறைகளை தான் செல்லுமிடமெல்லாம் பிரஸ்தாபிப்பவனாக இருக்க வேண்டும்.அவர்களுடைய வாழ்வியலையும் அதன் மீதான சவால்களையும் அறிந்தவனாக இருக்க வேண்டும்.அவர்களுடைய முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணிப்பவனாக இருக்க வேண்டும்.இரவும் பகலும் அவர்களுடைய விடிவுக்காக உழைப்பவனாக இருக்க வேண்டும்.
இப்போது சொல்லுங்கள் அரசியல் என்பது எவ்வளவு புனிதமானது....அதே நேரம் அது மிகவும் சுமையானது....அப்படியெனில் நமது சமூகத்தில் இந்த சுமையை தூக்க முன்வருபவர் எப்படியான தகுதியுள்ளவராக இருக்க வேண்டும்...?
இன்று சம்மாந்துறையின் பாராளுமன்ற உறுப்பினராக வர நினைப்பவர்களே.....உங்களுக்கு நிறைய பொறுப்புக்கள் காத்திருக்கின்றது.இன்று சகல துறைகளிலும் பின்னடைந்து போயிருக்கின்ற நமது உஊரை வளப் படுத்ஹா வேண்டிய பாரிய கடமைப்பாடு உங்களுக்கிருக்கின்றது.அறிந்து கொள்ளுங்கள் எம்மூரின் எம் பி ப் பதவி என்பது ஒரு முள் கிரீடமே.
இன்று இந்த பதவிக்கு ஆசைப்படும் நீங்களெல்லாம் இந்த சம்மாந்துறை மண்ணின் அபிவிருத்தியில் உங்களின் பங்களிப்பினை நீங்களே மதிப்பிட்டுக் கொள்வது சாலப் பொருத்தம் என்று நினைக்கின்றன்.50 வயதைத் தாண்டி ஓய்வெடுக்கும் தருவாயில் சமூகப் பணி புரிய நீங்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பது நல்ல விடயம்தான்...ஆனால் நீங்கள் இப்போதுதான் களத்துக்கு வந்திருக்கின்றீர்கள்.
உங்களுடைய தொழிலில்,குடும்பத்தில்,உங்கள் வாழ்வின் அனைத்து துறைகளிலும் மோட்சம் அடைந்து விட்டு இன்று நீங்கள் எம் பி பதவி வேண்டும் என கூறிக்கொண்டு நீங்களே உங்களை பிரஸ்தாபிக்கின்றீர்கள்.உண்மையாக சமூகம் உங்களைத் தேடும் நிலையில் இல்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்கின்றீர்கள்...

1000 ஆண்டு வரலாறு கொண்ட சம்மந்துறை எம்மண் பதி இன்று சகல துறைகளிலும் பின்னடைந்திருக்கும் நிலையில் நீங்கள் இம்மண்ணை முன்னேற்ற படை திரட்டுவதற்கு நன்றிகள்.....ஆனால் இம்மண்ணின் இன்றைய சீரழிவுக்கு நீங்களும் ஒரு காரணம் என்பதை திறந்த மனதுடன் ஏற்று மன்னிப்புக் கேளுங்கள்....உங்களுக்கு அந்த மனப் பக்குவம் இருக்கின்றதா என பார்க்கலாம்.
வளமான சந்தை இல்லை,மொத்த வியாபாரம் இல்லை,தொழில் பேட்டைகள் இல்லை,உற்பத்தி வியாபாரம் இல்லை,மூல வளங்களைப் பயன்படுத்தும் திட்டங்கள் இல்லை,வைத்திய நிபுணர்கள் இல்லை,கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் குறைவு,போட்டிப் பரீட்சை சார் பதவிகளில் தேர்சி இன்மை,முறையான ஆரம்பக் கல்வி இல்லை,கல்வியிலே பாரிய பின்னடைவு,அரசியல் இஸ்திரமின்மை,அரசியல் தரகர்களின் தேர்தல் வியாபாரம்,மக்களின் மனோ பாவத்தை நவீன உலகோடு இணைக்கத் தவறியமை,விவசாயத்தில் மறு மலர்ச்சி இன்மை இப்படி எவ்வளவோ பின்னடைவுகளைக் கண்டிருக்கின்றோம்....
இவைகள் எல்லாம் எம் பி மட்டும் செய்யும் வேலைகள் இல்லை.ஆனால் ஒரு எம் பி மேற்பார்வை செய்து ஆலோசனை சொல்ல வேண்டிய வேலைகள்.ஆனால் மேய்ப்பான் இல்லாத மந்தைகள் போல் சீரழிந்து விட்டோம்.இவ்வாறு நாம் சீரழிவதை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு இன்று அவர்கள் வந்து இவைகளை மறு சீரமைக்கப் போகின்றார்கள் என்பது வேடிக்கையாக இருக்கின்றது.
இவர்களுடைய சுடலைக் கரை ஞான நிலை குறித்து என்ன சொல்வது...?
இருந்தாலும் இனியாவது சமூக சேவை செய்யும் உள்ளுணர்வைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி கூறுங்கள்.உடனடியாக சம்மாந்துறைக்குப் பாராளுமன்ற உறுப்பினரைப் பெரும் உங்களின் வியூகத்தை மக்களுக்குத் தெளிவு படுத்துங்கள்.அத்துடன் நலிந்து போயிருக்கும் நமது ஊரை வரும் பத்தாண்டில் இலங்கையின் முன்னணி நகரமாக்கக்கூடிய உங்களின் கொள்கை விளக்கத்தினை உடனடியாக பகிரங்கப் படுத்துங்கள்.
அதனை விட்டு விட்டு இப்தார் செய்வது,சாப்பாடு போடுவது,சந்தியில் கூடுவது,சத்தம் போடுவது, வெடில் சுடுவது,அறிக்கை விடுவது,கத்தம் ஓதுவது,அரிசி பருப்புக் கொடுப்பது இப்படியான நல் கிரிகைகளையும்,சதகாக்களையும் அரசியல் என நீங்களும் நினைத்து மக்களையும் நினைக்க வைக்காதீர்கள்....அல்லாஹ் சகலவற்றையும் அறிந்தவன்......
மக்களைப் பிழையான வழியில் நடத்துவது,தனது சுயநலத்துக்காக மக்களைப் பலிக்கடாவாக்குவது சமூக விரோதச் செயல் மட்டுமல்ல மிகப் பெரும் அநியாயமாகும்.
சம்மாந்துறை தலைவர்கள் தந்த மண்......எல்லாவற்றுக்கும் முன்னோடி தரும் மண்......உலக சமூகங்களுக்கே முன்மாதிரிகள் கொண்ட மண்.......இம்மண்ணின் எதிர் காலம் இளைஞர்களே உங்களின் கைகளில் தான்.......புறப்படுங்கள்.......


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top