நோன்பை முறிக்க முயன்ற விவகாரம்
விசாரணைக்கு பிரத்விராஜ் சவான் உறுதி

டில்லியில் உள்ள மகாராஷ்டிர பவனில், முஸ்லிம் மேற்பார்வையாளரின் ரமழான் நோன்பை சிவ சேனா எம்.பி. முறிக்க முயன்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் உறுதி அளித்துள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
சிவ சேனா எம்.பி.யின் செயலுக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் சாம்னா பத்திரிக்கையில் வெளியாகியுள்ள கட்டுரையை திரும்பப் பெற வேண்டும் என்றும் சவான் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை,மராட்டிய சதனில் நடந்த சம்பவம் குறித்து மத்திய அரசு நாளை பதில் அளிக்கும் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டில்லியில் உள்ள மராட்டிய சதனில் அவர்களுக்கு சப்பாத்தி உணவு வழங்கப்பட்டது. அப்போது, சிவசேனா கட்சி எம்.பி.க்கள் சிலர் முஸ்லிம் கண்காணிப்பாளர் வாயில் சப்பாத்தியை வைத்து திணித்ததாக கூறப்படுகிறது. மராட்டிய மாநில பாரம்பரிய உணவுபொருட்களை வழங்காமல், சப்பாத்தி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பாராளுமன்றத்திலும் விவாதம் நடைபெற்றது. அப்போது கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று பாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அவுரங்காபாத்தில் நிருபர்களிடம் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘சிவசேனாவின் குரலை அடக்குவதற்கு சிலர் முயன்று வருகிறார்கள். நாங்கள் இந்துத்வா கொள்கைகளுக்கு ஆதரவானவர்கள் தான். இருந்தாலும் மற்ற மதத்தினர் மீது எங்களுக்கு எந்தவித வெறுப்புணர்ச்சியும் கிடையாது’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்பிரச்சனையை மாநிலங்களவையில் இன்று காங்கிரஸ் கட்சி எழுப்பியது. அப்போது பதில் அளித்த மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு, இது மிகவும் முக்கியமானது மற்றும் உணர்ச்சி கரமாண விவகாரம். இது குறித்து மத்திய அரசு நாளை பதில் அளிக்கும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே பாராளுமன்றத்தில் மகாராஷ்டிரா சதன் ஆணையருக்கு எதிராக சிவசேனா எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டுவர உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இரண்டு முறை எங்களை சந்திக்காமல் அவமதித்துவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top