காஸா முனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ்
3 நாள் சண்டை நிறுத்தம் அமுலுக்கு வந்தது

காஸா முனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ் ஆகின்றன. அங்கு 3 நாள் சண்டை நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் ஆட்சி செய்து வரும் காஸா முனையில் இருந்து வருகிற ராக்கெட் வீச்சுகளை முடிவுக்கு கொண்டு வரவும், எல்லைதாண்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, தாக்குதல் நடத்த போராளிகள் பயன்படுத்தி வந்த சுரங்கப்பாதைகளை தகர்க்கவும், இஸ்ரேல் கடந்த 8 ஆம் திகதி தாக்குதலை தொடங்கியது.
ஆனாலும் ஹமாஸ் போராளிகள் அடி பணியாததால் இஸ்ரேல் தரைவழி தாக்குதலையும் 17ஆம்  திகதி தொடங்கி தீவிரமாக்கியது. இரு தரப்பிலும் .நா. மற்றும் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க பல முறை சண்டை நிறுத்தங்களை அறிவித்தும் பலன் தரவில்லை. அவை பாதியிலேயே முறிந்து போயின.
இந்த சண்டையில் இதுவரையில் 1,867 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இஸ்ரேலும் 63 வீரர்களையும், பொதுமக்களில் 4 பேரையும் இழந்தது.
கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது உலகமெங்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று பலத்த குரல் எழுந்தது.
இந்த நிலையில், இரு தரப்பினரிடையே நேற்று காலை உள்ளூர் நேரப்படி 8 மணிக்கும், இலங்கை நேரப்படி காலை 10.30 மணிக்கும் 3 நாள் சண்டை நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இந்த சண்டை நிறுத்தத்தை .நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வரவேற்றுள்ளார்.
சண்டை நிறுத்தம் அமுலுக்கு வரும் முன்பாக ஜெருசலேம், டெல் அவிவ் நகர்களில் ஹமாஸ் இயக்கத்தினரின் ராக்கெட் வீச்சினால், சங்கொலி எழுப்பப்பட்டது. இதேபோன்று காஸாமுனையிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
காஸா முனை சண்டையில் ஈடுபட்டு வந்த தனது படைகள் அனைத்தையும் வாபஸ் ஆகும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது.
சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதையடுத்து காஸாமுனையில் பேட் லாஹியா என்ற இடத்தில் .நா. நடத்தி வருகிற பாடசாலையில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனர்கள் வெளியேறி வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
காஸா முனைக்கு வெளியே சண்டையிட தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் துருப்புக்களும் நாடு திரும்புகின்றன.
புதிய சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி இரு தரப்பினரும் கெய்ரோவில் நடக்கிற சமாதானப் பேச்சு வார்த்தையில் பங்கேற்க வேண்டும் என்ற அம்சம் இடம் பெற்றிருக்கிறது. பாலஸ்தீனத்தைப் பொருத்தமட்டில், காஸாமுனையில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் நிபந்தனையாக உள்ளது.

இரு தரப்பினரிடையே நிரந்தர சண்டை நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் தீவிரம் அடைந்துள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top