தென்கிழக்கு பல்கலைக்கழக புதிய கவுன்சில் நியமனம்
முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி



தென்கிழக்கு பல்கலைக்கழக புதிய கவுன்சில் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலே உள்ளார் என கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான .எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக கவுன்ஸிற்கு ஒன்பது பேரைக் கொண்ட புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு சிங்களவர்களும் நான்கு முஸ்லிம்களும் ஒரு தமிழரும் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் முஸ்லிம்களை அதிகமாக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் கங்கிரஸ் உயர் கல்வி அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளை நிராகரிக்குமாறு உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அழுத்தம் பிரயோகித்திருந்தார்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான .எம்.ஜெமீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தென் கிழக்கு பல்கலைக்கழக கவுன்ஸிற்கு நான்கு பேரை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தது. இதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் . மஜீத் மற்றும் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பொத்துவில் தொகுதியின் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் ஆகியோர் தலா ஒருவர் வீதம் சிபாரிசு செய்தனர்.
எனினும் இவர்கள் அனைவரதும் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எமது கட்சி சிபாரிசு செய்தவர்களில் மூன்று பேரை நியமிப்பதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க உறுதியளித்திருந்தார். எனினும் அவர்களை நியமிக்கக் கூடாது என உபவேந்தர் அழுத்தம் பிரயோகித்திருந்தார். இதனால் ஒருவர் மாத்திரமே நியமிக்கப்பட்டார்.
இதன்மூலம் தனக்கு விசுவாசமானவர்களை நியமிக்கும் நடவடிக்கையில் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் செயற்பட்டுள்ளார். தற்போது நியமிக்கப்பட்வர்களில் முஸ்லிம் காங்கிரஸ் சிபாரிசற்ற ஏனைய மூன்று முஸ்லிம்களில் ஒருவர் அவரது கைக்கூலி உறவினராவார். அதேபோன்று தனக்கு ஏற்ற வகையில் செயற்படும் சிங்களவர்களையே அவர் கவுன்ஸிற்கு நியமித்துள்ளார்.
கவுன்ஸிலிற்கு நியமிக்கப்பட்டுள்ள சிங்களவர்களில் ஒருவர் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரராவர். இவ்வாறானவர்களை நியமிப்பதன் மூலம் தனது மோசடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள உபவேந்தர் முயற்சிக்கின்றார்.
அதிகபடியான சிங்களவர்களை கவுன்ஸிலிற்கு நியமித்து அமைச்சரிடம் நல்ல பிள்ளை போன்று நடிக்க உப வேந்தர் முயற்சிக்கின்றார். இது அவர் சமூகத்திற்கு செய்யும் பாரிய துரோகமாகும்.
இந்த செயற்பாடுகளின் மூலம் எதிர்காலத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தினை சிங்கள மயமாக்க இவர் முயற்சிக்கின்றார். இந்த செயற்பாட்டினை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தற்போது நாட்டில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இன குரோதம் ஏற்பட்டுள்ள நிலையில் இதனை ஊக்குவிக்கும் வகையிலேயே உபவேந்தர் கவுன்ஸில் நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.
உபவேந்தரின் அழுத்தம் காரணமாக உயர் கல்வி அமைச்சர் மேற்கொண்ட தீர்மானம் அரசாங்கத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் மத்திய மற்றும் கிழக்கு மாகாண ஆட்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதற்கான முழுப் பொறுப்பையும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோரே ஏற்க வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் சிபாரிசு செய்யப்பட்டவர்களை நியமிக்குமாறு கட்சியின் தவிசாளரான அமைச்சர் பசீர் சேகுதாவூத்தும் உயர் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இவற்றையெல்லாம் மீறியே சிங்களவர்கள் அதிகமாக நியமித்து தனது ஊழலினை தொடர்ந்து மேற்கொள்ள உப வேந்தர் முயற்சி செய்கிறார்என அந்த அறிக்கையில் ஜெமீல் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top