அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்

ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் 

ஐ. தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க

கூட்டணி அரசை வீட்டுக்கு விரட்டியடிப்பதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனஜய திட்டத்தின் ஒரு அம்சமாக மஸ்கெலிய பகுதி வாக்கெடுப்பு நிலையப் பொறுப்பாளர்களுக்கான அறிவுறுத்தல் நிகழ்வு ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்ட பத்தில் நடைபெற்றது.
 இதன்போது உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியயதாவது,
 கடந்த ஒன்பது வருடங்களாக நாட்டை ஆட்சி செய்து வரும் தற்போதய அரசு மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வில்லை. மாறாக நாட்டு மக்களை நடுவீதிக்கு கொண்டு வந்துவிட்டதே இந்த அரசு செய்துள்ள விடயமாகும்.நான் இப்பகுதியின் பல இடங்களுக்குச்சென்று கொண்டிருந்தபோது பாதைகள் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்ததை அவதானித்தேன்.
 என்னவென்று கேட்டபோது, பாதைகளுக்கு காபட் இடுவதாகக்கூறினார்கள். இந்த நாட்டு மக்களை நடு வீதிக்குக்கொண்டு வந்த பெருமை தற்போதய அரசையே சேரும். இப்போது இந்த மக்கள் இங்கேயே மரணிப்பதற்கு உதவியாக வீதிகள் காபட்  இடப்படுகின்றன.
 இந்த மக்களின் ஆத்மா போன பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் காபட் வீதியில் மரணிக்க முடியுமா என்ன? முதலில் மக்களுக்குரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பெருந்தோட்ட மக்களுக்கு மலசலகூட வசதிகளையே செய்து கொடுக்காதவர்கள் எங்னம் வீடுகளை அமைத்துக்கொடுக்கப்போகின்றார்கள்? இதை இங்குள்ளோர் சிந்திக்க வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தால் மலையக மக்களுக்கென வீட்டுத்திட்டத்தை உருவாக்குவோம்.
 ஏனெனில் இம்மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றிய தெளிவு அக்காலத்திலிருந்து .தே.கவுக்கு மட்டுமே உள்ளது.உலகத்திலேயே எங்குமில்லாத அதிசயம் இலங்கையிலேயே நடக்கின்றது, அந்தளவிற்கு இந்த ஆட்சியின் பொருளாதார கொள்கை உள்ளது. பால் ஒரு லீற்றர் 49 ரூபாவிற்கு பண்ணையாளர்களிடம் பெறப்படுகிறது. கடையில் விசாரித்துப்பாருங்கள் ஒரு லீற்றர் தண்ணீர் போத்தலின் விலை 60 ரூபா.
 மற்ற நாடுகளில் எல்லாம் தண்ணிரை விட பாலின் விலையே அதிகம். எந்தளவிற்கு இந்த மக்கள் சுரண்டப்படுகின்றார்கள் என்பதற்கு இது ஒன்றே போதும். இன்று பெருந்தோட்ட மக்களின் வருமானம் எவ்விதத்திலும் போதாதுள்ளது. இதற்கு ஒரே வழி ஆட்சி மாற்றத்தைத் தவிர வேறொன்றுமில்லை. இப்பகுதியில் நல்ல மரக்கறிகள் விளைகின்றன .
 ஆனால் இஅதனால் இலாபமடைவது விவசாயிகள் அல்லர் முதலாளிகள் தான். இப்போது முதலாளிகளுக்கும் பிரச்சினை என இங்கு பலர் கூறுகிறார்கள்.
 அடுத்து நாம் முகங்கொடுக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கும் பணியாற்ற வேண்டும். இது சவால் மிக்க ஒரு பணி. காரணம் நாம் ஆட்சியிலிருந்து அகற்ற பாடுபடப்போவது இந்த நாட்டை பல வழிகளிலும் சீரழித்துக்கொண்டிருக்கும் நபர்களை.

 நீதித்துறையின் சுயாதீனத்தை இல்லாது செய்தவர்கள், பொலிஸாரை அரசியல்மயப்படுத்தியவர்கள், இலவச கல்வியை இல்லாது செய்தவர்கள், இலவச சுகாதார வசதியைத் தடுப்பவர்கள், நாட்டு மக்களை கடனில் தள்ளியவர்களையே நாம் வீட்டுக்கு அனுப்பப்போகிறோம். இதை மனதில் வைத்து நீங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.”. இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top