இலங்கைத் தூதரை நேரில் அழைத்து
கண்டனம் தெரிவிக்கப்படும்

-    சுஷ்மா சுவராஜ்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுசெய்து இலங்கை அரசு வலைதளத்தில் கட்டுரை வெளியான விவகாரம் குறித்து இலங்கை தூதரை நேரில் அழைத்து விளக்கம் கேட்கப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறும்போது, "இந்திய அரசு இலங்கையின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்படும்" என்றார் சுஷ்மா சுவராஜ்
மக்களவையில் இன்று அதிமுக எம்.பி.க்கள் இந்த விவகாரம் குறித்து அமளியில் ஈடுபட்டதையடுத்து, அவை நடவடிக்கைகள் இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைதளத்தில் வெளியான கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.   தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் மிகவும் அநாகரிமாக விமர்சித்து வெள்ளிக்கிழமை ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.   இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடமும் முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக இலங்கை அரசு தெரிவித்தது.   இந்த நிலையில், மாநிலங்களவை இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை முன்வைத்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.   பின்னர் அவை மீண்டும் கூடியபோது, அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையின் நடுவே வந்து, இலங்கை பாதுகாப்புத் துறை வலைதளத்தில் வெளியான கட்டுரையின் நகலை காண்பித்து கூச்சலில் ஈடுப்பட்டனர்.   "கேள்வி நேரத்தை இதுபோல வீணடிப்பது சரியல்ல. நீங்களும், உங்களுடைய சகாக்களும் உங்கள் இடத்திற்கு செல்லுங்கள்" என்று அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி வலியுறுத்தினார். இதனை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டதால், மீண்டும் அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.   இதே பிரச்சினை மக்களவையிலும் எழுப்பப்பட்டது. இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தினார். தொடர்ந்து இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அதிமுகவினர் குரல் எழுப்பினர். இதனால் மக்களவையின் நடவடிக்கையும் சில நிமிடங்கள் பாதித்தது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top