எம்.எச்.17 விமானம்:

198 உடல்கள் குளிரூட்டப்பட்ட ரயிலில் கொண்டு செல்லப்பட்டது

உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பலியானோர்களில் 198 பேர்களின் உடல்கள் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் டான்ட்ஸ்க் நகருக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள டாரேஸ் என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் 198 உடல்கள் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டு அந்த ரயில் டான்ட்ஸ்க் நகருக்குப் புறப்பட்டுச் சென்றதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
ரயில் நிலையத்தில் பிணத்தின் துர்நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சர்வதேச நிபுணர்கள் வந்து பார்வையிடும் வரை உடல்கள் அகற்றப்பட மாட்டாது என்று ரயிலை காவல் காக்கும் போராளிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் ரயில் ஒருவழியாக நிலையத்தை விட்டு நகர்ந்து இலோவைஸ்க் என்ற ஊரை நோக்கிப் புறப்பட்டது. அங்கிருந்து டான்ட்ஸ்க் நகருக்குச் செல்லவிருக்கிறது.
ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு, ரயிலில் 198 உடல்கள் இருப்பதை உறுதி செய்தனர்.
இதற்கிடையே போராளிகள் சாட்சியங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
தக்க நடவடிக்கையை ரஷ்யா எடுக்கவில்லையெனில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கடும் நடவடிக்கைகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது. இது பற்றி பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் தலைவர்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்உக்ரைனில் ரஷ்யா தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லையெனில் மேற்கு நாடுகள் ரஷ்யா மீதான தங்கள் அணுகுமுறையை அடிப்படையில் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top