சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பலியானவர்களில்
219 பேரின் உடல்கள் மீட்பு

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களில் 219 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் 192 பேரின் உடல்களை கிளர்ச்சியாளர்கள் ரயிலில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அவர்கள் ஆதாரங்களை மறைக்க முயற்சிப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டி உள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17 ஆம் திகதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர்.
இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இருப்பினும் இந்த விமானம் திட்டமிட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது வேறு ஒரு விமானத்தை குறிவைத்ததில் தவறுதலாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதா? என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை.
சம்பவ இடத்தில் உக்ரைன் அரசின் நெருக்கடி கால சேவை பணியாளர்கள் 380 பேர், 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நேற்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தில் 298 பேர் பலியான நிலையில், இதுவரை, 219 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
அதில் 192 பேரின் உடல்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கோணிகளில் வைத்து கட்டி வாகனங்களில் ஏற்றி கடத்தினர். அந்த வாகனங்கள், விமானம் விழுந்து கிடந்த இடத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள டோரஸ் என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு சென்றன. அங்கிருந்து உடல்களை இறக்கி, டன்ட்ஸ்க் நகருக்கு செல்கிற ரயிலில் குளிர்பதன வசதியுள்ள பெட்டிகளில் ஏற்றினர். அந்த பெட்டிகளில் பாதுகாவலர்களாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உடன் சென்றனர்.
சம்பவம் நடந்து 4 நாட்களான நிலையில் உடல்கள் எடுத்துச்செல்லப்பட்டதால், ரயில் நிலையத்தில் துர்நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பலியானவர்களின் உடல்கள், டன்ட்ஸ்க் நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் கூறின.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆயுதம் ஏந்திய ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், .எஸ்.சி.. என்னும் பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பினரை (கண்காணிப்பாளர்கள்) அழைத்து வந்தனர்.அவர்கள் சுதந்திரமாக தங்களது புலனாய்வு பணியை செய்ய கிளர்ச்சியாளர்கள் அனுமதித்தனர்.
இதற்கிடையே உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஆன்ட்ரி லிசெங்கோ, கீவ் நகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷிய ஏவுகணையின் தொடர்பை மறைப்பதற்கு தேவையான எல்லாவற்றையும் தீவிரவாதிகள் (ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்) செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்து விமானத்தின் சிதைந்து போன பாகங்களையும், உடல்களையும் அவர்கள் லாரிகளில் எடுத்துச்சென்றுள்ளனர். இதன் காரணமாக விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கான ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் வலுத்து வருகிற வேளையில், இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கிளர்ச்சியாளர்களின் அடாவடியால், ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கடும்  நெருக்கடி தர ஆரம்பித்துள்ளன. நேற்று பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன்  தலைவர்கள் கான்பிரன்ஸ் அழைப்பு மூலம் ஆலோசனை நடத்தி  உள்ளனர். அப்போது பிரான்ஸ் தரப்பில், ‘ரஷ்யா உடனடியாக உரிய  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதிபர் புடின் தனது அதிகாரத்தை  பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த வேண்டும். விசாரணை  குழு, மீட்புகுழுவினர் சுதந்திரமாக செயல்பட கிளர்ச்சியாளர்கள் வழிவிட  வேண்டும். இல்லாவிட்டால், ஐரோப்பிய பிரதேசங்களின் கடுமையான  விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும்என எச்சரித்துள்ளது. அதே  போல ஜெர்மனி, ‘இதுதான் ரஷ்யாவுக்கு தரப்பட்டுள்ள கடைசி வாய்ப்பு’  என கூறி உள்ளது. சம்பவ இடத்தில் தடயங்களை அழிக்க  கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவி செய்வதாக அமெரிக்காவும் குற்றம்  சாட்டி உள்ளது.
பிரிட்டனர் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியிட்ட அறிக்கையில்,  ‘ரஷ்யா தனது பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால்  கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்என கூறி உள்ளார். இதே போலஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட், ‘சம்பவம் நடந்த பகுதியில்  குழப்பான சூழல் நிலவுகிறது. தடயங்களை அழிக்க முயற்சிகள்  நடக்கிறது. உடனடியாக அங்கிருந்து சடலங்களை மீட்டு வர  முன்னுரிமை தர வேண்டும். உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்‘  என கூறி உள்ளார். இவ்வாறு உலக நாடுகள் ரஷ்ய அதிபர் புடினுக்கு  கடும் நெருக்கடி தருகின்றன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top