4 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்
3 மணிநேர அறுவை சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டது


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பப்பையை அகற்றியபோது பெண்ணின் வயிற்றுக்குள் தவறுதலாக வைக்கப்பட்ட கத்திரிக்கோலை 3 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினர்.
இந்தியாவிலுள்ள மங்களூர் அருகே உள்ள மாடூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹப்சா (வயது 42). இவர் கடந்த 2010–ம் ஆண்டு மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக் கொண்டார். அதன்பிறகு, ஹப்சாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் அதே மருத்துவமனைக்கு சென்றார். அப்போது டாக்டர்கள் அவருடைய வயிற்று வலி தீர சில மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்தனர்.
ஹப்சா அந்த மருந்து மாத்திரைகளை 4 ஆண்டுகளாக சாப்பிட்டும் எந்த பயனும் இல்லை. மாறாக நாளுக்கு, நாள் வயிறு வீக்கமும், வலியும் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் பயந்துபோன அவர் மங்களூரில் உள்ள வேறோரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது அவரது அடிவயிறு பகுதியில் கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹப்சாவின் உறவினர்கள் அவர் முதலில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கத்ரி பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஹப்சாவின் கர்ப்பப்பை அறுவை சிகிச்சையில் கவனக்குறைவாக செயல்பட்டு கத்திரிக்கோலை வயிற்றுக்குள் வைத்து தைத்த டாக்டர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஹப்சாவின் வயிற்றுக்குள் இருக்கும் கத்திரிக்கோலை அகற்றுவதற்காக அவரது உறவினர்கள் மங்களூரில் உள்ள இன்னொரு தனியார் மருத்துவமனையில் அவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை சேர்த்தனர். அங்கு ஹப்சாவின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோலை அகற்றுவதற்காக டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
3 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் டாக்டர்கள் ஹப்சாவின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோலை அகற்றினார்கள். இதுகுறித்து அறிந்த ஹப்சாவின் உறவினர்கள் டாக்டர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை குறித்து மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘ஹப்சாவின் வயிற்றுக்குள் கடந்த 4 ஆண்டுகளாக கத்திரிக்கோல் இருந்ததால் அந்த கத்திரிக்கோல் துருப்பிடித்து இருந்தது. இதனால் அவருடைய சிறுகுடல், பெருகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் தொடர்ந்து 15 முதல் 20 நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்என்றார்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து கத்ரி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதால், ஹப்சாவின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோலை அகற்றும் அறுவை சிகிச்சையை பொலிஸார் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.

ஹப்சாவின் உறவினர்கள் பொலிஸாரிடம்ஹப்சாவின் வயிற்றுக்குள் கத்திரிக்கோலை வைத்து தைத்த டாக்டர்களை விரைவில் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் விரைவில் அந்த மருத்துவமனை முன்பு மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’. என்று தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top