கட்சியின் தலைமையை மட்டுமே சாடுவது நியாயமா?
DR. என். ஆரிப்-


உலக வரைபடத்திலே வெறுமனே ஒரு புள்ளி போல காணப்பட்டாலும், நமது தாய்த்திரு நாடோ அமைந்திருப்பது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில்.இதனால் தான் சர்வதேச வல்லரசுகள் எம்மீது ஒரு பார்வையை வீசியவாறே இருக்கின்றன.
இதனை ஒப்பிப்பது போலவே, பெரிய நாடுகளெல்லாம் தோற்று விடுமாப் போல, அடிக்கடி பலவகையான சதுரங்க விளையாட்டுக்களும் அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன.
அதிலும், அரசியல் சதுரங்க விளையாட்டுக்கள் தான் ஏராளம். அந்த விளையாட்டுக்கள் கட்சிகளுக்கிடையிலும் நடக்கும், கட்சிகளுக்குள்ளேயும் நடக்கும். அந்த வகையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் விதிவிலக்கா என்ன.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில், ஒரு திருப்புமுனையாக, பலத்த எதிர்பார்ப்புகளுடன் ஜனனமானது தான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசு என்ற கட்சி. அது தோற்றம் பெற்ற காலப்பகுதி, அந்தக்காலப் பகுதியில் இருந்த அரசியல் நிலைமை மற்றும் அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஸ்ரப் அவர்களின் கட்சி மீதான இரும்புப் பிடி என்பன இன்றைய களநிலவரத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றது.
அந்தக் காலப்பகுதியில், தலைமைத்துவக் கட்டுப்பாடும், விரும்பியோ விரும்பாமலோ தலைமைத்துவத்துக்கு கட்டுப்படுகின்ற தன்மை மிகவும் உயர்வாகக் காணப்பட்டது.

அன்னாரின் திடீர் இழப்பின் பின்னர், நிகழ்ந்த விரும்பத்தகாத செயற்பாடுகளினால், அந்தக் கட்சி மாலுமியில்லாத கப்பலின் தடுமாற்றத்தை விடவும் மோசமான ஒரு நிலையை அடைந்தது.
அதன் விளைவை இன்றும் கூட நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். உறுதியான இரண்டாம் நிலைத் தலைமைத்துவம்  சரிவர அடையாளம் காட்டப்படாததன் விளைவா அதற்குக் காரணம் என்பது பகிரங்கப்படுத்தப்படாத ஒரு விவாதப் பொருளாக இருந்தாலும், இனிமேல் அதனைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை என்பதே பலரும் அதனைப் பற்றிப் பேசாமலிருப்பதற்கான காரணமாகலாம்.
எது எப்படியிருந்தாலும், அந்தக் கட்சியின் இன்றைய நிலையோ மிகவும் பரிதாபகரமானதாக இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரசை இரண்டாகப் பிளக்கிறார் அமைச்சர் பசில், நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரோடு இணைகிறார்கள் என்ற பிந்திய செய்தியானது அந்தக் கட்சியின் பரிதாபகர நிலையை வலுப்பிக்கிறது.
ஒருவேளை, அவ்வாறு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மரத்தை நேசிக்கும் மக்களின் தயவால் தமக்கென முத்திரையைப் பதித்து விட்டு ட்சி தாவுவதும், பின்னர் பதித்த முத்திரை கிழிந்து விலாசமில்லாமல் போகின்ற நிலை வந்தவுடன், மீண்டும் அந்த மரத்தை நாடுவதும் புதிதல்லவே. மரத்தை நேசிக்கும் மக்களும் இவர்களை மன்னித்து மீண்டும் விலாசம் கொடுத்து விடுகிறார்கள்.
தத்தமது சுயநலத்திற்காகவும், பதவி மோகத்தினாலும், கட்சியின் கொள்கைகளையும், தலைமையையும் நட்டாற்றிலே விட்டு விட்டுப் போவது சிலருக்கு கைவந்த கலை போலும். இவ்வாறான   ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பழி வந்து சேர்வது தலைமைக்குத் தான்.
இன்றைய அரசியல் கொந்தளிப்பு நிலைமைக்கு மூலகாரணம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசு என்பது வெள்ளிடை மலை.
பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தச்சட்ட மூலத்துக்குத் தேவையான குறைநிரப்பு வாக்குகளை எதுவித உடன்படிக்கையுமில்லாமல் வழங்கியதன் மூலம் வரலாற்றுத் துரோகத்தை இழைத்து விட்டார்களே என்று இப்போது பலரும் அங்கலாய்ப்பதைக் காணமுடிகின்றது.
அதிலும், தலைவர் றவுப் ஹக்கீம் இப்படியொரு தவறைச் செய்து விட்டாரே என்பவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள்.அந்த ஒரு முடிவுக்கு தலைவர் றவுப் ஹக்கீமைத் தள்ளியது யார் என்பதை தெரிந்தவரகளும் கூட, வெளிப்படையாகக் கூறத் தயங்குவது ஏன் என்பது புரியவில்லை.
அந்த முடிவுக்கு தலைவர் றவுப் ஹக்கீம் வருவதற்கு காரணமாக இருந்தவர்களை விட்டு விட்டு வெறுமனே தலைவரை மட்டும் குறை சொல்வது ஏற்புடையதல்ல. அவர் அந்த முடிவுக்கு வந்திருக்காவிட்டாலும், அந்தச் சட்டமூலம் நிறைவேறியிருக்கும். வேலி பயிரைத் தாண்டுவது ஒன்றும் அந்த ஒரு சிலருக்கு புதிதல்லவே.
இத்தனைக்கும் காரணம் பொதுமக்களாகிய நாங்கள் தான். ஏனெனில், தேர்தல் காலங்களிலே வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும், எங்களுக்கென்று ஒரு கட்சி வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்.
தெரிவு செய்யப்பட்ட பின்னர், தனிநபர் சுயநலத்திற்காக வாக்களித்த மக்கள், தனக்கு முத்திரை கொடுத்த கட்சி, கட்சித் தலைமை எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு, கட்சி மாறிய வரலாறுகள் எத்தனையோ பார்த்திருக்கிறோம்.
அப்படியிருந்தும், மீண்டும் தேர்தல் வருகின்ற போது, எந்தவிதமான சங்கடமுமில்லாமல் அவர்களும் தேர்தலில் குதிக்கிறார்கள், நாங்களும் அவர்களுக்கு வாக்களிக்கிறோம்.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும். கட்சி தாவுகின்றவர்களை, குறிப்பாக எமக்கென அடையாளமிடப்பட்ட முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த கட்சி தாவுகின்றவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், வெறுமனே கட்சித் தலைமையைக் குறை கூறுவது ஏற்புடையதுமல்ல, நியாயமுமல்ல.
அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவுப் ஹக்கீம் அவர்கள் பலவகையான விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
அவரின் முடிவுகள், தீர்மானங்கள் பலசமயங்களில் விமர்சிக்கப்படுவதையும் நோக்க முடிகின்றது. விமர்சிப்பவர்கள் ஒருவிடயத்தை மறந்து விடுகிறார்கள். அவர் ஒரு தனிநபராக தீர்மானம் எடுக்க முடியாமல், மற்றவர்களையும் அனுசரித்தே தீர்மானம் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகம்.
இந்த நிலைமைக்கு வைக்கும் ஆப்புத் தான், கட்சி தாவுதன் மூலம் கட்சியைப் பலவீனப்படுத்துவது அல்லது கட்சியை துண்டாடுவது. இந்த துர்ப்பாக்கிய நிலையைத் தவிர்ப்பதற்காக முடிவுகளையும் தீர்மானங்களையும தலைவரால்; சிறிது மாற்ற வேண்டியேற்படுகின்றது என்பதை நாம் ஊகிக்க முடிகின்றது.

எனவே தான், வெறுமனே கட்சித் தலைமையைக் குறை கூறுவதை தவிர்த்து, உண்மையாகவே காரணமானவர்களை குறை கூறுவதுடன் உரிய நேரத்தில் அவர்களுக்குத் தகுந்த பாடமும் புகட்டப்பட வேண்டும். அப்போது தான், அரசியலில் எமக்கான பலத்தை நாங்கள் தக்கவைத்துக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top