விரைவாக விசாரியுங்கள்
இந்திய முன்னாள் அமைச்சர் சசிதரூர்

சசிதரூரின் மனைவி சுனந்தாவின் சாவை இயற்கை மரணமாக அறிவிக்கும்படி எனக்கு நெருக்கடி கொடுத்தனர் என்று முன்னாள் இந்திய  மத்திய அமைச்சர்கள் 2 பேர் மீது எய்ம்ஸ் டாக்டர் கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்திய மனித வளத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்தவர், சசிதரூர். இவரது காதல் மனைவி சுனந்தா புஷ்கர்.
இருவருக்கும் திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் 52 வயது சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் திகதி  தெற்கு டில்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
சுனந்தாவின் மரணம் குறித்து அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக, சசிதரூர்-சுனந்தா இருவரது மணவாழ்க்கையிலும், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் மெஹர் தரார்(45) என்பவர் புகுந்ததே காரணம் என்று சொல்லப்பட்டது.

இதன்காரணமாக சுனந்தாவை சசிதரூர் விவகாரத்து செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், இந்த பிரச்சினையால், தான் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டதாகவும் சுனந்தா டுவிட்டர் சமூக வளைத்தளம் மூலம் மெஹர் தராருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் சசிதரூர், சுனந்தா, மெஹர் தரார் இடையே சமூக வளைத்தளங்கள் வாயிலாக யுத்தம் நடந்து வந்ததாக தெரிகிறது. இந்த பிரச்சினைக்கு பிறகுதான் சுனந்தா டில்லி ஓட்டலில் பிணமாக கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து சுனந்தாவின் உடல் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர் குப்தாவின் தலைமையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, சுனந்தாவின் இரு கைகளிலும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவரது கன்னத்தில் கீறல்களும் காணப்பட்டன.
இதேபோல், அவரது இடது உள்ளங்கையில் ஆழமாக பற்கள் பதிந்ததற்கான அடையாளங்களும் இருந்தன. எனினும், இவை மரணம் நேரிடக் காரணமாக அமையவில்லை என்றும் பிரேத பரிசோதனையில் கூறப்பட்டது.
இதையடுத்து சுனந்தாவின் குடல் உறுப்புகள் ஆய்வக சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அளவுக்கு மீறி மாத்திரைகள் தின்றதால் அது விஷமாக மாறியிருப்பது கண்டறியப்பட்டது. இதிலும் தெளிவான முடிவுகள் கிடைக்காததால் இது பற்றி பொலிஸார் வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை.
மேலும் சுனந்தாவின் சகோதரர், மகன், சசிதரூர் மற்றும் அவரது ஊழியர்கள் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தபோது, இவர்களில் யாரும் சுனந்தாவின் மரணத்தில் எந்த தவறான நிகழ்வுகளும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து மனச்சோர்வுக்கான மாத்திரைகளை அதிக அளவில் தின்றதால் சுனந்தாவுக்கு இயற்கையாகவே மரணம் நேர்ந்தது என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது.
தற்போது 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இப்பிரச்சினையில் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவரான சுதிர் குப்தா, சுனந்தாவின் மரணம் தொடர்பாக பரபரப்பு புகார் ஒன்றை இந்திய மத்திய சுகாதாரத்துறைக்கும், மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கும் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த புகாரில், ‘சுனந்தா இயற்கையாக மரணமடைந்தார் என்று அறிவிக்கவேண்டும் என அப்போதைய இந்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2 அமைச்சர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். மேலும், நாங்கள் கூறும்படி திட்டமிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை தயாரிக்கும்படியும் என்னை அவர்கள் வற்புறுத்தினார்கள். அதற்கு நான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தேன்என்று சுதிர்குப்தா குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது.
இது பற்றி இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கூறுகையில் தெரிவித்துள்ளதாவது, ‘‘நான் சுகாதாரத்துறை அமைச்சரான பிறகு எய்ம்ஸ் டாக்டர் சுதிர் குப்தா தனக்கு பதவி உயர்வு வேண்டி மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் நேற்று முன்தினம் டி.வி.சேனல்கள் வெளியிட்ட செய்திகளில், சுதிர் குப்தா ஒரு குறிப்பிட்ட புகாரை தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டது. இது பற்றி விரிவான தகவல்களை அனுப்பி வைக்கும்படி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த புகார் தொடர்பாக டாக்டர் சுதிர்குப்தாவிடம் கேட்டபோது, ‘‘இந்த பிரச்சினை பற்றி கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. இது தீவிரமானதொரு சட்டப்பூர்வ விஷயம். அதை நான் ஊடகங்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாது. நான் ஒரு அரசு ஊழியன். நான் எதைச் சொல்ல விரும்பினாலும், அதை உரிய இடத்தில்தான் சொல்ல முடியும். இதுபற்றி உரிய அதிகாரிகளிடமும் ஏற்கனவே நான் தெரிவித்து விட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து, டில்லி பொலிஸ் கமிஷனர் தெரிவித்திருப்பதாவது,
இந்த சம்பவம் பற்றி(சுனந்தாவின் மரணம்) குறித்து அத்தனை கோணங்களிலும் டில்லி பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையில் தேவையானதை நாங்கள் செய்வோம். அவசியம் என்றால், சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் சுதிர் குப்தா மேல் விசாரணைக்காக அழைக்கப்படுவார். மேலும், அவர் மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு எழுதி இருப்பது பற்றியும் கவனத்தில் கொள்ளப்படும்
சட்டநிலை மற்றும் இதற்கான தகுந்த ஆதாரங்களை கவனத்தில் கொண்டு இந்த மரணம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். தேவைப்படும் பட்சத்தில் சசிதரூரையும் அழைத்து விசாரணை நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சுனந்தாவின் உடலை, பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் சுதிர்குப்தா தெரிவித்துள்ள குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்து உள்ளது.
இதுபற்றி அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரஷீத் ஆல்வி கூறுகையில், டாக்டருக்கு யாரும் நெருக்கடி தரவில்லை. அப்படி யாராவது வற்புறுத்தி இருந்தால் அவர்களது பெயரை அந்த டாக்டர் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மனைவி சுனந்தாவின் மரணம் குறித்த விசாரணையை விரைவாக நடத்தி, தெளிவான முடிவுக்கு வருமாறு முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் சசிதரூர் டில்லி பொலிஸுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 17-ஆம்  திகதி டில்லியில், அப்போதைய மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தொடர்பான டில்லி பொலிஸாரின் விசாரணை இன்னும் முடியவில்லை.
இதனிடையே, சுனந்தாவின் உடலை, பிரேத பரிசோதனை செய்த டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர்குப்தா, ‘சுனந்தா இயற்கையாக மரணமடைந்தார் என்று அறிவிக்கும்படி அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2  அமைச்சர்கள் எனக்கு நெருக்கடி அளித்தனர். இதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன்என்று மத்திய சுகாதாரத்தைக்கு கடிதம் எழுதி உள்ளார்.

சுனந்தாவின் மரணம் தொடர்பான பிரச்சினை மீண்டும் பூதாகரமாகி இருப்பதால், அவருடைய கணவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் ஒரு அறிக்கை விடுத்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மனைவி சுனந்தாவின் மரணம் எனக்கு மிகப்பெரிய இழப்பாகும். இது தொடர்பான விசாரணையை விரைவாகவும், வெளிப்படையானதாகவும் முடிக்குமாறு புலன் விசாரணை நடத்தும் அதிகாரிகளை நான், ஆரம்பம் முதலே கேட்டுக்கொண்டு வந்திருக்கிறேன்.
இதே கருத்தைத்தான் சுனந்தாவின் குடும்பத்தினரும் கொண்டுள்ளனர். மேலும் நாங்கள் அனைவரும் இப்பிரச்சினையில், விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறோம்.

எனவே இந்த விஷயத்தில் காலத்தை கடத்தாமல் விசாரணையை நடத்தி முடித்து தெளிவான மற்றும் நிச்சயமானதொரு முடிவை வெகு விரைவில் பொலிஸார் கொண்டு வரவேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் இதில், நிலவும் அனைத்து வித ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top