சொல்வதற்கு மன்னியுங்கள்!

யூ.எல்.மப்றூக்


அரச படைகளின் உதவியோடு நடத்தி முடிக்கப்பட்ட அளுத்கம மற்றும் பேருவளைக் கலவரங்களில் ஏற்பட்ட அழிவுகளை, அரச படைகளைக் கொண்டே அரசாங்கம் புனர்நிர்மாணம் செய்வதுதான் இந்தக் கதையின் உச்சகட்டக் குரூரமாகும்.
- நடந்து முடிந்த கலவரத்தில் அளுத்கம பிரதேசத்தில் மட்டும் 580 கோடி ரூபாய் பெறுமதியான சொத்து இழப்புக்கள் எற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் ஏற்பட்ட அழிவுகளை, புனர்நிர்மாணம் செய்வதற்காக என்று கூறி, ஜனாதிபதி வெறும் 20 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்திருக்கிறார். இதுதான் - இந்தக் கதையின் வக்கிரம் நிறைந்த நையாண்டியாகும்.
- ஒட்டு மொத்த அழிவுகளையும் புனர்நிர்மாணம் செய்வதற்காக, 20 கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதன் மூலமாக, நடந்து முடிந்த அழிவுகளை 'ஒரு சிறிய சம்பவமாக'க் காட்டுவதற்கு ஆட்சியாளர்கள் - மீண்டும் ஒரு தடவை முயற்சித்திருக்கின்றார்கள்.
- 08 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதும், கணிசமான முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ள அரசியல் கட்சியுமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவிகள் எவற்றினையும் வழங்கியதாகத் தெரியவில்லை. மு.காங்கிரசின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசனலியைத் தொடர்பு கொண்டு - இது தொடர்பில் விசாரித்தோம். 'பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி செய்வதற்கு எங்கள் கட்சியில் நிதிவசதிகள் இல்லை' என்றார். 'கோடீஸ்வரர்களான தலைவரையும், தவிசாளரையும் கட்சியில் வைத்துக் கொண்டு இப்படிக் கூறலாமா' என - பதிலுக்குக் கேட்டோம். 'அதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்' என்று சிரித்துச் சொல்லிச் சமாளித்தார்.
- மறுபுறம், அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. ஜனாதிபதியுடன் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் - அமைச்சரவையில் வைத்து கடுமையாக வாய்த்தர்க்கம் புரிந்தார் என்கிற சூடுபறக்கும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன. அமைச்சர் அதாஉல்லா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, 'தனிநாடு கேட்கும் நிலைக்கு முஸ்லிம்களையும் கொண்டு செல்லப் போகிறீர்களா' என்று கேட்டதாக இன்னொருபுறம் ஒரு செய்தி வெளிவந்துசிலரைப் புல்லரிக்க வைத்தது. இப்படி இவர்கள் பேசுவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னதான் நலவுகள் ஆகிவிடப்போகிறது. உண்மையில், தங்கள் இயலாமையினை மறைக்க, வார்த்தைகளால் இவர்கள் சண்டித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். பேசிப்பேசி ஒரு பெண்ணை கர்ப்பமாக்க முடியாது என்கிற உண்மையை இவர்கள் மிக நன்றாக அறிவார்கள். ஆனாலும், அதைத்தான் இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
# 'சொல்வதற்கு மன்னியுங்கள்' எனும் தலைப்பில் - இன்றைய 'விடிவெள்ளி' பத்திரிகையில் வெளியாகியுள்ள யூ.எல்.மப்றூக் கட்டுரையிலிருந்து.

நன்றி: 'விடிவெள்ளி'

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top