தானும் நோன்பிருந்து முஸ்லிம்களை அழைத்து
இப்தார் விருந்து கொடுக்கும்
எழுச்சித் தமிழர் திருமாவளவன்

Aloor Shanavas

நோன்பு வைக்கும் முஸ்லிம்களை அழைத்து, இப்தார் விருந்து கொடுத்து வருபவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன். அத்தகைய விருந்தில் நோன்பாளிகளுடன் பங்கேற்கும் அவர், நோன்பு நோற்காமல் வெறுமனே கஞ்சி குடிப்பதை தவிர்த்து, அவரும் நோன்பிருந்து வருகிறார். 10 ஆண்டுகளாக நோன்பைக் கடைபிடித்து வரும் அவர், தன் சகாக்களையும் நோன்பு பிடிக்கத் தூண்டுகிறார்.
இஸ்லாம் வலியுறுத்தும் நோன்பு என்பது, மதக்கடமை என்பதையும் தாண்டி அறிவியல் பூர்வமான உண்மை என்று கருதுகிறார் எழுச்சித் தமிழர். ஆண்டுக்கு ஒரு மாதம் வயிற்றுக்கும், செரிமான உறுப்புகளுக்கும் ஒய்வு கொடுக்கும் அருமையான செயல்பாடு என்றும், நோன்பு இருப்பதனால் உடலில் மிகப்பெரும் மாற்றத்தை உணர்வதாகவும் தன் அனுபவத்தை சொல்கிறார். எத்தனையோ மதங்கள் நோன்பை வலியுறுத்தினாலும், இஸ்லாம் கூறும் நோன்பில் ஓர் ஒழுங்கும், கால வரையறையும், கட்டுப்பாடும் இருப்பதனால் இந்த நோன்பை தான் கடைபிடிப்பதாக கூறுகிறார்.
அரசியல் ரீதியாக மட்டுமின்றி பண்பாட்டுத் தளத்திலும் முஸ்லிம்களுடன், தான் ஒன்றியிருக்க விரும்புவதாகவும், அத்தகைய இரண்டறக் கலந்த உறவே சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்றும் சொல்கிறார். கடவுள் நம்பிக்கையே இல்லாத பெரியார், தன் நண்பர் ரசிகமணியின் 60-ஆம் கல்யாணத்துக்காக முருகன் கோயிலுக்குச் சென்றதை நினைவு கூரும் அவர், தான் மதம்மாறவில்லை எனினும் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கைகளை மதிப்பதாகவும், அவற்றில் பிடித்தவற்றை பின்பற்றுவதாகவும் கூறுகிறார்.
கடந்த 19 ஆம் திகதி ஸஹர் நேரத்தில் சென்னையில் எனது இல்லத்தில் நடைபெற்ற 'ஸஹர்' விருந்தில், கட்சித் தோழர்களுடன் பங்கேற்று நோன்பு வைத்தார் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top