அமெரிக்க ஜனாதிபதிகளில் மோசமான ஜனாதிபதி ஒபாமாதான்!

கருத்துக் கணிப்பில் தகவல்


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்களிலேயே ஒபாமாதான் மிக மோசமான ஜனாதிபதி என்று கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ஒபாமாவின் செயல்பாடுகள் குறித்தும் அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மோசமானவர் யார்? என்பது குறித்தும் அமெரிக்கர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்களிலேயே ஒபாமாதான் மிக மோசமான ஜனாதிபதி என்று 33 சதவீதம் பேர் கருத்து கூறியிருந்தனர். அவரைத் தொடர்ந்து மிக மோசமான ஜனாதிபதி ஜார்ஷ் புஷ் என்று 28 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர். ஒபாமாவுக்கு முன் அவர் ஜனாதிபதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2012ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிட் ரோம்னி ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று 45 சதவீதம் பேரும், அப்படி நடந்திருந்தால் நாட்டின் நிலை மேலும் மோசமாகியிருக்கும் என்று 38 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். ஒபாமா அரசு திறம்பட செயல்படவில்லை என்று 54 சதவீதம் பேரும், தனது நிர்வாகத்தின் மீது அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என்று 48 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சிறந்த ஜனாதிபதியாக இருந்தவர் ரொனால்டு ரீகன்தான் என்று 35 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அவரைத் தொடர்ந்து சிறந்த ஜனாதிபதிகளாக பில் கிளிண்டன் (18 சதவீதம்), ஜான் எஃப்.கென்னடி (15 சதவீதம்), ஒபாமா (8 சதவீதம்) ஆகியோர் இருப்பதாக கருத்து கூறப்பட்டுள்ளது.


ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதிகளிலேயே கிளிண்டன்தான் சிறந்தவர் என்று 34 சதவீதம் பேரும், கென்னடி மற்றும் ஒபாமா சிறந்தவர்கள் என்று தலா 18 சதவீதம் பேரும் கருத்துக் கூறியுள்ளனர். 52 வயதாகும் ஒபாமா தற்போது ஜனாதிபதியாக இரண்டாவது மற்றும் கடைசி பதவிக்காலத்தை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top