காஸாவில் முடிவுக்கு வந்தது போர் நிறுத்தம்

தொடங்கியது மீண்டும் தாக்குதல்

காஸாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட 5 மணி நேர போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த உடனேயே, ஹமாஸ் போராளிகளும், இஸ்ரேல் படையினரும் மீண்டும் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
இஸ்ரேல் விமானத் தாக்குதலில் 226 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்தப் பிராந்தியத்தில் நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான தீவிரமான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காஸா கடற்கரையில் 4 பாலஸ்தீனக் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளுக்கான .நா. சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் செர்ரி, போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரைக் கேட்டுக்கொண்டார்.
அதனையடுத்து, உணவுப் பொருள்கள், குடிநீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களை பாலஸ்தீனர்கள் சேகரித்துக் கொள்வதற்கு வசதியாக, ஐந்து மணி நேரத்துக்கு தாக்குதலை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததும், பாலஸ்தீனர்கள் கடைகளுக்கும், வங்கிகளுக்கும் விரைந்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.
இந்நிலையில், 5 மணி நேர தாற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும், ஹமாஸ் போராளிகள் உடனடியாக ராக்கெட் தாக்குதலைத் தொடங்கினர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் தொடுத்தன.
இந்தத் தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பத்து நாள்களுக்கும் மேல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளிடையே நிகழ்ந்து வரும் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர எகிப்து தலைவர்கள் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, "5 மணி நேர போர்நிறுத்தம் அமுலுக்கு வரும் வரையில் காஸா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இதுவரை 226 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,678 பேர் காயமடைந்துள்ளனர்' என்று காஸா மருத்துவப் பணிகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் என்று தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனை மறுத்த இஸ்ரேல், அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி வரும் ஹமாஸ் போராளிகளே இதற்குப் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top