மாவடிப்பள்ளி பாலம் திருத்தப் பணிகள்
முன்னறிவிப்பற்ற போக்குவரத்து தடை அவதியுறும் மக்கள்

- முகம்மது பாயிஸ்-

அம்பாறை கல்முனை பிரதான வீதியில் திடீரென ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து தடையினால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
காலையில் பாதை சீராக இருந்தபோது தமது பயணங்களை இந்தப் பாதையின் மூலமாக மேற்கொண்ட மக்கள் வீடு திரும்பும் போது எதிர்பாராத விதமாக இந்த இன்னலை எதிர்கொண்டுள்ளனர்.
அம்பாறை-கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள மாவடிப்பள்ளி பாலம் திருத்தப் பணிகளுக்காக பாரிய இயந்திரங்களைக் கொண்டு பணி செய்யப்படுவதற்காக பாலத்தினூடான போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்
இத்தகைய திடீர் தடையினால் அலுவலகங்களுக்கு கடமைக்கு சென்று வீடு திரும்புவோரும் அன்றாடம் கூலித்தொழிலுக்காக அயற்கிராமங்களுக்கு சென்று களைப்புடன் வீடு திரும்புவோர் மற்றும் மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்லும் மக்களும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை எந்தவிதமான ஊடக முன்னறிவித்தலும் இல்லாமல் திடீரென இத்தகைய போக்குவரத்து தடையினை ஏற்படுத்தி சிரமத்துக்குள்ளாக்குவதால் மாற்றுவழிகளை தெரிவு செய்யும் வாய்ப்பையும் நேரத்தையும் வீணடிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இத்தகைய தடைகளை ஏற்படுத்துவது பற்றி ஏலவே மக்களுக்கு தெரியப்படுத்துவதனால் இத்தகைய நெருக்கடிகளை குறைக்க முடியும் என்பதோடு மக்கள் மாற்றுவழிகளை பயன்படுத்துவதில் நேரவிரயத்தை தவிர்த்து பொருத்தமான மாற்றுவழியை தெரிவு செய்யவும் ஏதுவாக அமையும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது

எல்லாவற்றுக்கும் மேலாக இத்தகைய பாரிய அபிவிருத்திப்பணிகளை இரவு நேரங்களில் மேற்கொள்வதால் சகல நடவடிக்கைகளும் சுமுகமாக இடம் வாய்ப்பாகும் என்கின்றனர் மக்கள்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top