போர் நிறுத்தம் கொண்டு வர
காஸா விரைகிறார் பான் கீ மூன்

இறந்தவர்கள் எண்ணிக்கை 340 ஆக அதிகரிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகள் இடையே போர்நிறுத்தம் கொண்டு வர உதவுவதற்காக காஸாவுக்கு .நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் விரைவில் செல்லவுள்ளார். இதனிடையே, காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோரது எண்ணிக்கை 340ஆக உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் இராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடந்த 8ஆம் திகதி தொடக்கம் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் விமானப்படையும், இராணுவமும் காஸா மீது இரவு பகலாக குண்டுகளை வீசி கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
இருதரப்பினருக்கும் இடையே 13 நாட்களாக நீடித்து வரும் சண்டையால், அந்தப் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகளிடையே போர்நிறுத்தம் கொண்டு வருவதற்காக .நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், காஸாவுக்கு விரைவில் செல்லவுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக .நா. அரசியல் விவகாரத் துறைத் தலைவர் ஜெஃப்ரி பெல்ட்மேன் கூறியதாவது: இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்கள் இடையே போர் நிறுத்தம் கொண்டு வர உதவுவதற்காக பான் கீ மூன், விரைவில் அந்தப் பிராந்தியத்துக்கு செல்லவுள்ளார். தனது பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. காஸாவில் இருந்து தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது. எனினும், இதற்கு இஸ்ரேலின் கடும் பதிலடியால் நாங்கள் கவலையடைந்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இஸ்ரேலும், ஹமாஸ் போராளிகளும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று எகிப்து நாடு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் சமே சுக்ரி செய்தியாளர்களிடம் பேசியிருப்பதாவது:
இஸ்ரேலும், ஹமாஸ் இயக்கத்தினரும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். பேச்சுவார்த்தைக்கு இதுதான் ஓரே வழியாகும் என்றார்.
இதனிடையே, காஸாவில் இருந்து இரகசியமாக அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவி ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதனைக் கண்டுபிடித்து இஸ்ரேல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் போராளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் சுரங்கம் வழியாக தப்பிச் சென்று விட்டனர்.
காஸாவில் இருந்து வீசப்பட்ட ராக்கெட், இஸ்ரேலின் அணுஉலை அமைந்துள்ள திமோனா என்னும் பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதேபோல், காஸா பகுதியில் இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களில், சிறார்கள் உட்பட 25 பேர் பலியாகினர். இதனையடுத்து காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பலியானோரது எண்ணிக்கை 340ஆக அதிகரித்துள்ளது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top