இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

உத்தியோகபூர்வப் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
நண்பகல் 12.15 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்தார். இதைத் தொடர்ந்து, இருதரப்பு நல்லறவு, ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்தை பிற்பகலில் நடைபெறவுள்ளது. அப்போது இரு நாடுகள் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இன்று காலை 10 மணிக்கு மகாத்மா காந்தி  நினைவிடத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது மனைவி ஜெயந்தியுடன்  அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அமைச்சர்களையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்தார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பினைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மீண்டும் செல்லும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறார். அதன் பிறகு, பிரணாப் முகர்ஜி இரவு 8 மணிக்கு அளிக்கும் அரசு விருந்தில் அவர் பங்கேற்கிறார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top