காஷ்மீரில் துப்பாக்கி சூடு, வன்முறை சம்பவங்களில்
பலி எண்ணிக்கை    21 ஆக உயர்வு

அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை 

காஷ்மீரில் துப்பாக்கி சூடு, வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. அங்கு அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிபாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெகபூபா முப்தி முதல்மந்திரியாக பதவி வகிக்கிறார்.
அந்த மாநிலத்தில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானியும், அவரது கூட்டாளிகள் இருவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநிலத்தில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தன.
முழுஅடைப்பின் போது மாநிலத்தில் பல நகரங்களில் பர்கான் வானியின் ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறை ஏற்பட்டது. அனந்தநாக் மாவட்டத்தில் பண்டிபோரா, குவாசிகுந்த், லார்னு ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன.
பண்டிபோராவில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். குவாசிகுந்த் பகுதியில் 3 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பாரமுல்லா நகரில் கல்வீசி தாக்கிய வன்முறை கும்பலை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். துப்பாக்கி சூடு மற்றும் வன்முறை சம்பவங்களில் 11 பேர் பலி ஆனார்கள்.

வன்முறை சம்பவங்கள் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. அமர்நாத் பக்தர்கள் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், காஷ்மீரில் நேற்று 2–வது நாளாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. புல்வாமா, அனந்தநாக், குல்காம் மாவட்டங்களில் நேற்றும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அனந்தநாக் மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் போலீஸ் ஜீப் ஒன்றை ஜீலம் ஆற்றுக்குள் தள்ளினார்கள். இதில் அந்த ஜீப்பின் டிரைவர் பலி ஆனார். புல்வாமா மாவட்டத்தில் டிரால் என்ற இடத்தில் போலீஸ்காரர் ஒருவர் தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
தமால் ஹன்ஜிபுரா என்ற இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 போலீஸ்காரர்களை பணயகைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளையும் பறித்துக்கொண்டனர். பணயகைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் 3 பேர் தவிர மற்ற போலீஸ்காரர்கள் திரும்பிவிட்டனர். அந்த மூவரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிர் இழந்தார். இதேபோல் வேறு சில இடங்களில் நடந்த மோதல்களில் 9 பேர் மரணம் அடைந்தனர். இதனால் மரண எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. இரு நாட்கள் நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் 200–க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். ஸ்ரீநகர் உள்ளிட்ட பல இடங் களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து நேற்று முன்தினம் கவலை தெரிவித்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அமைதிகாக்குமாறு அந்த மாநில மக்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், ராஜ்நாத் சிங் காஷ்மீர் முதல்மந்திரி மெகபூபா முக்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் பற்றி கேட்டு அறிந்தார். அப்போது காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதி அளித்தார்.
காஷ்மீரில் அமைதி நிலவ மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், தீய சக்திகளுக்கு துணை போகக்கூடாது என்றும் முதல்மந்திரி மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் மக்களிடம் நல்லிணக்கத்தை உருவாக்கி, மாநிலத்தில் அமைதி திரும்ப மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார். போராட்ட சம்பவங்களின் போது உயிர் இழப்புகளை தடுக்க பாதுகாப்பு படையினர் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top