கிழக்கு மாகாணத்தில் வலயக்கல்விப் பணிப்பாளருக்கான

14 வெற்றிடங்கள் உண்டு

இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் தகவல்

(அஸ்லம்)

கிழக்கு மாகாணத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு பதினான்கு பேருக்கான வெற்றிடம் நிலவுவதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக மேற்படி சங்கச் செயலாளர் தகவல் தருகையில்,
கிழக்கு மாகாணத்தில் மொழி மூல அடிப்படையில் 12 தமிழ்மொழி மூல வலயங்களும் ஐந்து சிங்கள மொழி மூல வலயங்களும் உள்ளன. இவற்றுக்கான வலயக்கல்விப் பணிப்பாளர்களாக இலங்கை கல்வி நிருவாக சேவை வகுப்பு ஒன்றைச் சேர்ந்தோர் கடமையாற்ற வேண்டும்.
ஆனால் தற்போது கிழக்கு மாகாணத்தில் முதலாம் வகுப்பைச் சேர்ந்த நான்கு பேர் மாத்திரம் வலய கல்விப் பணிப்பாளர்களாக கடமையாற்றுகின்றனர். இவர்களுள் ஒருவர் ஏப்ரல் மாதத்துடன் ஓய்வுபெறுகிறார். இதனடிப்படையில் 14 பேருக்கு வெற்றிடம் நிலவுகிறது.
இவ்வெற்றிடங்களை 08 இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர்களும் 06 மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தர்களும் தற்காலிக அடிப்படையில் கவனித்து வருகின்றனர். சிங்கள மொழி மூலமான வலயங்கள் நான்கிலும், தமிழ்மொழி மூலமான வலயங்களில் இரண்டிலும் மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் இப்பதவிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் அரச சேவைகள் ஆணைக்குழு கிழக்கு மாகாண ஆளுனருக்கு வழங்கியுள்ள வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பான தெளிவுபடுத்தலில் கிழக்கு மாகாணத்தில் முதலாம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு தட்டுப்பாடு உள்ளதால் இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர்களை நியமனம் செய்யுமாறு கேட்டுள்ளது.

இதனடிப்படையில் இப்பதவிக்கு மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் தகுதியற்றோர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிழக்கில் சிங்கள மொழி மூலம் இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர் ஒருவர் மாத்திரம் உள்ளார்.தமிழ்மொழி மூலம் 13 பேர் உள்ளனர்.   

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top