பெருமையுடன் வந்தார்
பல சறுக்கல்களுடன் விடை பெறுகிறார்
ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டு
முறை முழு ஆட்சி காலத்திலும்
பிரதமர் பதவி வகித்தவர் என்ற
பெருமைக்குரிய மன்மோகன் சிங் (வயது81), கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சில சாதனைகள் அதற்கு
இணையாக பல சறுக்கல்களுடன் விடை
பெறுகிறார். நாடு முழுவதும் வீசிய
மோடி அலையில் சிக்கி காங்கிரஸ்
கப்பல் மூழ்கிய நிலையில், பிரதமர்
பதவியை இன்று அவர் ராஜினாமா
செய்கிறார்.2004ம் ஆண்டு காங்கிரஸ்
தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தபோது,
மன்மோகனுக்கு பிரதமர் பதவி அதிர்ஷ்டம்
அடித்தது. தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், ஐக்கிய
முற்போக்கு கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக
5 ஆண்டுகள் வழிநடத்திச் சென்றதற்கு பலனாக, 2009ல் தொடர்ச்சியாக 2வது
முறையாக பிரதமர் பதவி அவரைத்
தேடி வந்தது. நாட்டின் முதல்
பிரதமரான ஜவஹர்லால் நேரு தொடர்ச்சியாக 17 ஆண்டுகள்
பதவி வகித்த நிலையில், அவருக்கு
அடுத்தபடியாக 10 ஆண்டுகள் பதவியை முழுமையாக நிறைவு
செய்கிறார் மன்மோகன்.
கூட்டணி
கட்சிகளின் நெருக்கடி, கட்சித் தலைமையின் கெடுபிடி
போன்ற காரணங்களால் ‘செயல்படாத பிரதமர்’ என எதிர்க்கட்சிகளின் மோசமான விமர்சனத்துக்கு உள்ளானாலும்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி
சட்டம், தகவல் அறியும் உரிமை
சட்டம், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், ஒட்டுமொத்த உற்பத்திக் குறியீட்டில் வரலாறு காணாத அளவுக்கு
8.5 சதவீத வளர்ச்சி போன்றவை இவரது சாதனைகளாக
பதிவாகி உள்ளன.பதற்றமான காலகட்டத்திலும்
பாகிஸ்தானுடன் இணக்கமான நல்லுறவை பராமரிக்க இவரது தனிப்பட்ட முன்முயற்சிகள்
பெரிய அளவில் உதவின என்பதிலும்
சந்தேகமில்லை.அதே சமயம் நிலக்கரி
சுரங்கம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள்
இவரது ஆட்சியின் மாட்சிக்கு ஏற்பட்ட களங்கங்கள்.
பாகிஸ்தானின்
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காஹ் கிராமத்தில்
1932, செப். 26ம் தேதி பிறந்த
மன்மோகன் மிகச் சிறந்த பொருளாதார
நிபுணராகப் புகழ் பெற்றதுடன் 1971ல்
வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக இடம் பெற்றார். நிதியமைச்சக
செயலர், ரிசர்வ் வங்கியின் கவர்னர்,
பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர்
என்று பல்வேறு பதவிகள், பொறுப்புகளை
வகித்தார். 1991ல் இருந்து மாநிலங்களவை
உறுப்பினராக இருந்து வருகிறார்.
வாஜ்பாய்
தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி
ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். பத்ம விபூஷன் விருது
(1987), இந்திய அறிவியல் மாநாட்டில் (1995) நேரு நூற்றாண்டு விழா
விருது, சிறந்த நிதியமைச்சருக்கான ஆசிய
விருது (1993, 94), ஐரோப்பிய விருது (1993) உள்பட ஏராளமான விருதுகள்
வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். எத்தனையோ
வெற்றிகளையும் வீழ்ச்சிகளையும் சந்தித்திருந்தாலும், எளிமையான பின்னணியை சேர்ந்த ஒருவரும் இந்திய
ஜனநாயகத்தில் பெரிய அளவில் சாதிக்க
முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி
பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் என்ற பெருமை மன்மோகன்
சிங்குக்கு என்றும் நிலைத்திருக்கும்.
மோடிக்கு
பிரதமர் வாழ்த்து
தேர்தல்
முடிவுகள் நேற்று வெளியாகி கொண்டிருக்கும்போது,
பாஜ அறுதி பெரும்பான்மை வெற்றியை
நோக்கி சென்று கொண்டிருந்தது. உடனே,
நரேந்திர மோடியை பிரதமர் மன்மோகன்
சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

0 comments:
Post a Comment