போராளிகள் கடத்திய மாணவிகளை மீட்க
நைஜீரிய அதிபரிடம் மலாலா வலியுறுத்தல்

நைஜீரியாவில் போராளிகள் கடத்திச் சென்றுள்ள 219 மாணவிகளை விரை வில் மீட்க நடவடிக்கை எடுப்பதாக மலாலாவிடம் அந்நாட்டு அதிபர் உறுதியளித்துள்ளார். நைஜீரியாவில் போகோஹராம் போராளிகள் தனிநாடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்நாட்டின். சிறையில் உள்ள தங்கள் கூட்டாளிகளை விடுவிக்கக் கோரி, அந்த போராளிகள் கடந்த ஏப்ரலில், சிபோக் நகருக்கு அருகே உள்ள பாடசாலையில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்தி சென்று பணய கைதிகளாக வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து சில மாணவிகள் தப்பி வந்துள்ளனர். தற்போது 219 மாணவிகளை அவர்கள் சிறை வைத்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகள், நைஜீரிய இராணுவத்துக்கு போராளிகளின் நடமாட்டம் குறித்த இரகசிய தகவல்களை அளித்து வருகின்றன.
எனினும், இராணுவத்தால் போராளிகளை ஒடுக்க முடியவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த 2012ம் ஆண்டு போராளிகள் குறியில் இருந்து தப்பிய சிறுமி மலாலா யூசுப்சை, நைஜீரியாவுக்கு நேற்று முன் தினம் வந்தார். அவர் பெண்கள் கல்வி, உரிமை மற்றும் மேம்பாட்டுக்காக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். நைஜீரியா தலைநகர் அபுஜாவுக்கு வந்த மலாலா, போராளிகளால் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர், நைஜீரிய அதிபர் குட்லக் ஜோனாதனை சந்தித்து பேசினார். அப்போது, போராளிகளிடம் இருந்து மாணவிகளை என்ன விலை கொடுத்தாவது விரைவில் மீட்க வேண்டுமென கோரினார்.


இதன்பின், நிருபர்களிடம் மலாலா கூறியதாவது: மாணவிகளை மீட்கும் பிரச்னை மிகவும் சிக்கலாக உள்ளதாக அதிபர் கூறினார். எனினும், அவர்களை தனது குழந்தைகளை போல கருதி விரைவில் மீட்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மாணவிகளை மீட்டதும் அவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளை அளித்து பாதுகாப்பாக பாடசாலைகளுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கவும் உறுதியளித்திருக்கிறார். இஸ்லாம் அமைதியை விரும்பும் மதம். இதை உணர்ந்து போராளிகள் நமது சகோதரிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு மலாலா கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top