காஸா முனைப் பகுதியில் சண்டையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துங்கள்

இஸ்ரேல், ஹமாஸ் போராளிகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்

காஸா பகுதியில் சண்டையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் .நா.சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 3 பேர் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் போராளிகளின் பிடியில் உள்ள காஸா முனைப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் கடந்த ஒரு வாரமாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இதேபோல் ஹமாஸ் போராளிகளும் இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை வீசி தாக்கி வருகின்றனர். ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் இருந்து அல்கொய்தா போராளிகளும் இஸ்ரேலுக்குள் ராக்கெட் தாக்குதலை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் இராணுவம் நேற்று முன்தினம் தரைவழியாக சென்றும் ஹமாஸ் போராளிகளின் நிலைகள் மீது தாக்குதலை நடத்தின. சுமார் 200–க்கும் மேற்பட்ட இலக்குகளை நோக்கி தாக்குதலை நடத்திவிட்டு இராணுவம் திரும்பியதாக இஸ்ரேல் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய போர் விமானங்கள் காஸாவின் பெய்ட் லாகியா பகுதியில் வசிக்கும் மக்களை அப்பகுதியில் இருந்து தற்காலிகமாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு துண்டுபிரசுரங்களை வீசி எச்சரித்தன. இந்த நகரில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை காஸா பகுதியில் மட்டும் 173–க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,200 பேர் படுகாயமடைந்து உள்ளனர். 17 ஆயிரம் பேர் உயிருக்கு பயந்து வீடுகளை விட்டு .நா.சபை அமைத்துள்ள பாதுகாப்பு முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர்.
இந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே சண்டை நீடித்து வருவது குறித்து .நா.சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் ஏற்கனவே ஏராளமானோர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் தரைவழித் தாக்குலை தீவிரப்படுத்தினால் இது சந்தேகத்துக்கு இடமின்றி சாவு எண்ணிக்கையை அதிகரிக்கத்தான் செய்யும். இதனால் காஸா பகுதியில் உள்ள பொதுமக்கள்தான் மிகுந்த பாதிப்பை அடைவார்கள்.
தற்போது இப்பகுதியில் மிகவும் மோசமான சூழல் நிலவி வருகிறது. இது கவலைக்குரிய ஒன்றாகும். இரு தரப்புக்கும் சண்டை நீடித்தால் இப்பகுதிகள் சுடுகாடாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது. இந்த சண்டையில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை பாலஸ்தீன பகுதியில் வசிப்போரும், குறிப்பாக காஸா முனைப் பகுதியில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் இவர்களுக்கு நீண்டகாலமாகவே அவர்கள் விரும்பும், சுதந்திர உணர்வும், கெளரவமும் மறுக்கப்பட்டு வருகிறது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் அரசியல் பிரச்சினைகளுக்கு இராணுவத்தைக் கொண்டு தீர்வு காண இயலாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனவே இராணுவ ரீதியான மோதல் போக்கை கடைப்பிடிப்பதை இருதரப்பினரும் உடனடியாக கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வரவேண்டும். அப்போதுதான் இப்பிராந்தியத்தில் அமைதியும், பாதுகாப்பும் நிலவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top